உள்ளூர் செய்திகள்

ஆன்மீகத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது- புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

Published On 2023-05-08 08:08 GMT   |   Update On 2023-05-08 08:08 GMT
  • கொரோனா காலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
  • தற்போது உலக சுகாதார மையம் கொரோனா இல்லாத காலமாக அறிவித்துள்ளது. இதற்கு அறிவியலும் காரணம் ஆன்மீகமும் காரணம்.

வேலூர்:

வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் உள்ள நாராயணி பீடத்தின் 31-வது ஆண்டு விழா இன்று நடந்தது.

யாக பூஜையில் சக்தி அம்மா கலந்து கொண்டு பூஜைகள் செய்தார். யாக சாலை பூஜையில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

ஆன்மீகம் தழைக்க வேண்டும் ஆன்மீகம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆன்மீகத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது.

சமீப காலமாக தமிழுக்கும், ஆன்மீகத்திற்கும் சம்பந்தமில்லை என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. ஆன்மீக வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

ஆன்மீகத்தோடு கூடிய தமிழ், தமிழுடன் கூடிய ஆன்மீகம் தான் நமது தமிழகத்திற்கு வளர்ச்சியை தரும்.

ஆன்மீகத்தை தவறாக சனாதன தர்மம் வர்ணாசிரமம் என்று தூய்மையான ஆன்மீகத்திற்கு தவறான கருத்து முன் நிறுத்தப்படுகிறது. ஆன்மீகத்தில் எந்த ஏற்றத்தாழ்வும் கிடையாது.

இதிகாசங்களிலும் நமது சரித்திரங்களிலும் அனைவரும் சமம் என்றே கூறுகிறது. மதமும் அப்படித்தான் சொல்கிறது.

ஆனால் இந்து மதம் ஏற்றத்தாழ்வுகளையும் தீண்டாமையையும் தான் முன்னிறுத்துவதாக கருத்து தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு இல்லை.

தமிழக முதலமைச்சருக்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். நாங்கள் யாரையும் பேதமின்றி பார்ப்பதில்லை என்று கூறுகிறீர்கள்.

ஆனால் ஆன்மீக அன்பர்களாகிய எங்களுக்கு ஏன் தீபாவளி மற்றும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறுவதில்லை என்று கேட்டேன். அதற்கு இன்று வரை அவரிடம் இருந்து பதில் வரவில்லை.

அனைவரும் இணைந்து பணியாற்றுவது நமது தமிழக ஆன்மீக கலாச்சாரம் ஆகும்.

கொரோனா காலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

தற்போது உலக சுகாதார மையம் கொரோனா இல்லாத காலமாக அறிவித்துள்ளது. இதற்கு அறிவியலும் காரணம் ஆன்மீகமும் காரணம்.

தடுப்பூசியும் இறைவனின் ஆசியும் சேர்ந்தால்தான் வாழ்வில் நமக்கு நல்ல உடல் நலத்தை தரும். எல்லா பதவிகளுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கவர்னரை தான் தேடித்தேடி சந்தித்து மனு கொடுத்தார்கள்.

சம்பந்தமில்லாதவர்கள் என்றால் ஏன் அவரை தேடிச் சென்று மனு கொடுக்க வேண்டும்.

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நாங்கள் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். எங்களுக்கு தான் அதிகாரம் உள்ளது. நீங்கள் என்ன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா என்று கேட்கிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் மக்களுக்கு சேவை செய்பவர்களும் இருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூட சேவை செய்யாமல் உள்ளனர்.

மக்களிடம் உண்டியல் குலுக்கி எனக்கு சிறப்பு விமானம் வாங்கி தருவதாக நாராயணசாமி கூறுகிறார். இதற்கு ஏன் மக்களிடம் கையேந்த வேண்டும். நீங்கள் சேர்த்து வைத்த பணத்திலே எனக்கு வாங்கி கொடுக்கலாம்.

புதுச்சேரி மக்களும் ஐதராபாத் மக்களும் வசதியாக இருக்க வேண்டும் என்று நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இது அவருக்கு தெரியாதா. நான் செல்வதாக இருந்தால் சிறப்பு விமானத்தில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, மக்களோடு மக்களாகவே செல்வேன்.

புதுச்சேரிக்கும் ஐதராபாத்திற்கும் விமான சேவை வந்ததே நாராயணசாமிக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News