உள்ளூர் செய்திகள்

மழை நீடிப்பு- குமரியில் குளு குளு சீசன்

Published On 2024-06-29 08:38 GMT   |   Update On 2024-06-29 08:38 GMT
  • குழித்துறை ஆற்றில் உள்ள சப்பாத்து பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது.
  • கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக இருந்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. கொட்டாரம், மயிலாடி, சுருளோடு, ஆணைக்கிடங்கு, களியல், குழித்துறை, தக்கலை, இரணியல், முள்ளங்கினா விளை உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்ட இருக்கிறது.

முள்ளங்கினாவிளையில் அதிகபட்சமாக 22.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 328 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் காரணமாக குழித்துறை ஆறு, கோதை ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

குழித்துறை ஆற்றில் உள்ள சப்பாத்து பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது. கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 3-வது நாளாக இன்றும் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்புக்கு வந்தனர்.

அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.19 அடியாக இருந்தது. அணைக்கு 1715 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையின் மதகுகள் வழியாக 662 கன அடி தண்ணீரும், உபரிநீராக 2028 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.26 அடியாக உள்ளது. அணைக்கு 975 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 17.02 அடியாக உள்ளது. அணைக்கு 270 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 17.12 அடியாக உள்ளது. அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 45.77 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 22.20 அடியாகவும் உள்ளது. தொடர் மழைக்கு மாவட்டம் முழுவதும் நேற்று 3 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

கீரிப்பாறை, குலசேகரம், தடிக்காரங்கோணம் பகுதிகளில் ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News