உள்ளூர் செய்திகள்

கடலூர் அதிமுக பிரமுகர் கொலையில் 3 பேர் கைது

Published On 2024-07-01 09:27 GMT   |   Update On 2024-07-01 09:27 GMT
  • நேதாஜி, அஜய், சந்தோஷ் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
  • கடலூர் நகர பகுதியில் பதட்டத்தையும், பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.

கடலூர்:

கடலூர் வண்டிப்பாளையம் ஆலைக் காலனியை சேர்ந்தவர் புஷ்பநாதன் (வயது 46), அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி, கடலூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர். இவர் தனது வீட்டிற்கு நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் புஷ்பநாதனை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேவதி உள்பட 3 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்படி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள், செல்போன் டவர்கள், கொலை செய்யப்பட்ட புஷ்பநாதனின் செல்போன் போன்றவைகளில் ஆய்வு செய்தனர்.

அதே பகுதியை சேர்ந்த நேதாஜி, அஜய், சந்தோஷ் ஆகிய 3 வாலிபர்களை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடந்த ஓராண்டுக்கு 3 பேரும் சேர்ந்து ஆடுகளை திருடியுள்ளனர். இதனை அ.தி.மு.க. பிரமுகர் புஷ்பநாதனிடம் விற்பனை செய்து உள்ளனர். திருடப்பட்ட ஆடுகள் கடலூர் தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமானதாகும். இது தொடர்பான புகாரில் ஆடு திருடிய நேதாஜி, அஜய், சந்தோஷ் உள்ளிட்டவர்கள் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். இதற்காக பயன்படுத்தப்பட்ட கார் போன்ற வாகனங்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தங்களை ஜாமீனில் எடுக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை போலீசாரிடம் இருந்து மீட்டு தரவும் புஷ்பநாதனிடம் உதவி கேட்டுள்ளனர். ஆனால் புஷ்பநாதன் உதவி செய்யவில்லை. தொடர்ந்து ஜாமீனில் வெளிவந்த இவர்கள் இது குறித்து புஷ்பநாதனிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் புஷ்பநாதனுக்கும் அந்த வாலிபர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக புஷ்பநாதனை கொலை செய்ய திட்டமிட்ட நேதாஜி, அஜய், சந்தோஷ் ஆகியோர், கடந்த சில தினங்களாக புஷ்பநாதனை நோட்டமிட்டு நேற்று முன்தினம் இரவு கொலை செய்தது தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து நேதாஜி, அஜய், சந்தோஷ் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இத்தகவல் அறிந்து ஆத்திரமடைந்த புஷ்பநாதனின் உறவினர்கள் 3 பேரின் வீடுகளை சூறையாடினர். மேலும், அ.தி.மு.க. பிரமுகர் புஷ்பநாதனின் இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ள்தால், அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடலூர் நகர பகுதியில் பதட்டத்தையும், பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.

Tags:    

Similar News