என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "police inquiry"
- வீட்டின் கதவு கடந்த சில நாட்களாக பூட்டியே கிடந்தது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மிட்டாதார்குளம் பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின் (வயது 38). இவர் பி.எம்.சி. மார்க்கெட்டில் செல்போன் கடை நடத்தி வந்தார்.
இதற்காக மணலிவிளை எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வீட்டில் வசித்து வந்தார். இவரது வீட்டின் கதவு கடந்த சில நாட்களாக பூட்டியே கிடந்தது. இந்த வீட்டில் இருந்து பிணவாடை வீசுவதாக அப்பகுதி மக்கள் திசையன்விளை போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தரையில் அழுகிய நிலையில் மார்ட்டின் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவரது மனைவி பியூலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பியூலா ஆஸ்பத்திரியில் தங்கி மகளை கவனித்து வருகிறார். இதனால் மார்ட்டின் திசையன்விளையில் தனியாக வசித்து வந்தார்.
அவருக்கும் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா சுமார் 25 கிலோ பறிமுதல்.
- கைதான 7 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தச்சநல்லூர் அருகே உள்ள சிதம்பரநகர் விலக்கு பகுதியில் தச்சநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனிகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினர். அதில் இருந்த 7 பேரிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த காரை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா சுமார் 25 கிலோ இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்த 7 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அவர்கள், தச்சநல்லூர் கரையிருப்பு கிராமத்தை சேர்ந்த இசக்கிபாண்டி(42), மணிகண்டன்(38), ரகுநாதன்(41), முத்து பட்டன்(28), கணபதிமில் காலனியை சேர்ந்த ரகுநாதன் (41), சுந்தர் கணேஷ்(27), பழைய பேட்டையை சேர்ந்த பண்டாரம்(55), மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்த சுடலை(34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த கும்பல் பெங்களூரில் இருந்து குட்காவை இங்கு கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பல் இதற்கு முன்பும் இதே போன்று காரில் குட்கா கடத்தி வந்து நெல்லை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான திசையன்விளை, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வினியோகம் செய்து வந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக, கைதான 7 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணத்தை வாங்கிய பின் ஒரு வாரம் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை.
- பொன்ஆனந்த், அவரது மனைவி சாந்தி ஆகியோர் மிரட்டல் விடுத்தனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்தவர் ஜெயமாலா (வயது 48). இவர் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து செல்வகுமார் என்பவரை 2-வது திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஜெயமாலா ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த வாரம் கலங்காபுதூரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றேன். பின்னர் அங்கிருந்து வீடு திரும்புவதற்காக பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தேன்.
அப்போது கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்த பொன்ஆனந்த் (வயது 50), அவரது மனைவி சாந்தி ஆகியோர் காரில் அங்கு வந்தனர். இருவரும் ஊருக்கு செல்ல அரசு பஸ் வர தாமதம் ஆகும். எனவே காரில் ஏறி கொள்ளுங்கள் வீட்டில் இறக்கி விடுகிறோம் என கூறினர்.
இதனை நம்பி நான் அவர்களுடன் சென்றேன். ஆனால் என்னை வீட்டில் இறக்கி விடாமல் அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு பொன் ஆனந்த் ரூ.2½ லட்சம் கொடுத்தால் உனக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் என ஆசைவார்த்தை கூறினார்.
மறுநாள் தென்காசி ரோட்டில் உள்ள தனியார் வங்கிக்கு என்னை அழைத்து சென்ற பொன் ஆனந்த் எனது தாலி உள்பட 6 பவுன் நகையை அவரது பெயரில் அடகு வைத்து ரூ.2 லட்சம் கடன்பெற்றார்.
மேலும் எனது ஏ.டி.எம். கார்டு மூலம் வங்கி கணக்கில் இருந்த ரூ.55 ஆயிரத்தை எடுத்தார். பணத்தை வாங்கிய பின் ஒரு வாரம் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது, பொன்ஆனந்த், அவரது மனைவி சாந்தி ஆகியோர் மிரட்டல் விடுத்தனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தி வருகிறார். மாவட்ட குற்ற பிரிவிலும் இதுதொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது.
பொன் ஆனந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னம்மா பேரவையில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததாக கூறப்படுகிறது.
- சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற விஜயகுமார், மணிவண்ணன் ஆகியோர் பிடிபட்டனர்.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப்பொருள்கள் விற்பனையை தடுக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல் துணை ஆணையர் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது 2.7 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற விஜயகுமார், மணிவண்ணன் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலி மருத்துவர் அங்கமுத்துவை அஞ்செட்டி போலீசார் கைது செய்தனர்.
- உரிமையாளர்கள் இல்லாததால், உண்மை கண்டறியப்படும் வரை, மருந்து கடைகளுக்கு சீல் வைத்தனர்.
தளி:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா பருவநள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது54). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் ஒரு வீடு எடுத்து அருணாச்சலா மெடிக்கல் என்ற கிளினிக் நடத்தி வந்துள்ளார்.
10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் ஆங்கில கல்வி ஏதும் பயிலாமல் அரசு விதிகளுக்கு புறம்பாக ஆங்கில மருத்துவ சிகிச்சைகளை அளித்து வந்துள்ளார்.
இதுகுறித்து இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் கிருஷ்ணகிரி மருத்துவர் தர்மருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை தலைமை மருத்துவ அலுவலர் கிரிஜா தலைமையில் ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ் காந்தி, கோட்டையூர் கிராம நிர்வாக அலுவலர் இளம் பிரதி உள்பட மருத்துவ குழுவினர் கோட்டையூர் கிராமத்திற்கு சென்று அந்த வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் அங்கமுத்து 10 வகுப்பு வரை படித்துவிட்டு அரசு விதிகளுக்கு புறம்பாக போலியாக பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
இதனையடுத்து மருத்துவ குழுவினர் போலி மருத்துவர் அங்கமுத்துவை பிடித்து அஞ்சடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலி மருத்துவர் அங்கமுத்துவை அஞ்செட்டி போலீசார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவர் நடத்தி வந்த தனியார் கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.
அதேபோல், கோட்டை யூரில் உள்ள சாமுண்டீஸ்வரி மற்றும் அருணாச்சலா ஆகிய இரு மருந்து கடைகளில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் வந்தது. அங்கு உரிமையாளர்கள் இல்லாததால், உண்மை கண்டறியப்படும் வரை, மருந்து கடைகளுக்கு சீல் வைத்தனர்.
- பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
- சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
குனியமுத்தூர்:
பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவைக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பஸ்களில் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பணி நிமித்தமாக வருவோர் என ஏராளமான பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.
இன்று காலை பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று கோவைக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் பொள்ளாச்சியை சேர்ந்த டிரைவர் சுரேஷ் (27) என்பவர் ஓட்டுனராக இருந்தார். கண்டக்டராக கதிரேசன் (55) என்பவர் இருந்தார்.
அதிகாலை நேரம் என்பதால் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வேலைக்கு வருவோர் உள்பட 40 பயணிகள் பஸ்சில் இருந்தனர்.
காலை 8 மணியளவில் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதை பார்த்த டிரைவர் சுரேஷ் அதிர்ச்சியானார். ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதை உணர்ந்த அவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.
பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் 40 பேரையும் உடனடியாக பஸ்சை விட்டு கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் அனைவரும் பஸ்சை விட்டு இறங்கினர்.
அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பஸ்சின் முன்பகுதியில் எரிய தொடங்கிய தீ பஸ் முழுவதும் வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து பஸ்சில் பற்றி எரிந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பஸ்சின் இருக்கைகளும் எரிந்து விட்டன. பஸ் தற்போது பாதி எரிந்த நிலையில் உள்ளது.
தகவல் அறிந்து செட்டிப்பாளையம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் எரிந்த பஸ்சை பார்வையிட்டனர்.
பஸ்சில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து கழக அதிகாரிகளும் விசாரிக்கின்றனர்.
என்ஜினில் புகை வருவதை பார்த்ததும் டிரைவர் உடனடியாக சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ் நிறுத்தி பயணிகளை கீழே இறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 40 பயணிகளும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
காலை நேரத்தில் பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த அரசு பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
- தந்தை மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- மகனை கொன்று விட்ட சோகத்தில் இருந்த ராமசாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பொம்மைய நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 74). ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரியான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இதில் 3-வது மகன் சுப்பிரமணிக்கு (34) மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி மதுகுடிக்க பணம் கேட்டு தந்தை ராமசாமியை தொந்தரவு செய்து வந்துள்ளார். கடந்த 1-ந்தேதி சுப்பிரமணியன் வழக்கம்போல் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.
ஆனால் ராமசாமி தரமுடியாது என கண்டிப்புடன் தெரிவித்தார். இதனால் தந்தை மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுப்பிரமணி தந்தையை தாக்கினார். இதையடுத்து வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராமசாமி மகனை சரமாரியாக வெட்டினார்.
இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கைதான ராமசாமிக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தது. இதற்காக அவர் மருந்துகளை உட்கொண்டு வந்தார். மகனை கொன்று விட்ட சோகத்தில் இருந்த ராமசாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்தார்.
- பள்ளியில் போலீசார் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.
- வெடிகுண்டு உள்ளதா என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஒவ்வொரு பகுதியாக அங்குலமாக சோதனையிட்டனர்.
ஈரோடு:
தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. ஈரோட்டில் ஏற்கனவே 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் சோதனையில் அது புரளி என தெரிய வந்தது.
இந்நிலையில் மீண்டும் இ-மெயில் மூலம் சி.பி.எஸ்.சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிபுரத்தான் பாளையத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி இ-மெயில் ஐ.டி.க்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். இதை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பள்ளிக்கு அவசர அவசரமாக விடுமுறை அறிவித்து இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
பெற்றோர்களும் பதறி அடித்துக் கொண்டு பள்ளிகளுக்கு வந்து தங்களது குழந்தைகளை வேக வேகமாக வீடுகளுக்கு அழைத்து சென்றனர். பெருந்துறை டி.எஸ்.பி கணேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து வந்தனர். மேலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் உடனடியாக பள்ளிக்கு வந்து வெடிகுண்டு உள்ளதா என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஒவ்வொரு பகுதியாக அங்குலமாக சோதனையிட்டனர்.
பள்ளி கேட் மூடப்பட்டு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதேபோல் ஈரோடு நாராயண வாசலில் உள்ள ஒரு தனியார் பள்ளி, வீரப்பம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் போலீசார் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.
- பல்வேறு தொண்டு நிறுவனங்கள், வசதி படைத்தவர்கள் சார்பில் பொருள் மற்றும் பண உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
- காப்பகத்தை நடத்தி வந்த நிர்வாகி தஸ்தகீரிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முள்ளிக்கொரை பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆதரவற்றவர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் என 54 ஆண்கள், 33 பெண்கள் என மொத்தம் 87 பேர் இருக்கிறார்கள்.
இந்த காப்பகத்திற்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள், வசதி படைத்தவர்கள் சார்பில் பொருள் மற்றும் பண உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே இந்த காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
இது தொடர்பாக நாம்தமிழர் கட்சி நிர்வாகி செல்வம் என்பவர், தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் முறைகேடாக பணம் வசூலிக்கப்படுகிறது. அங்குள்ள முதியவர்களை தாக்கி அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகிறது என்பன உளளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி கலெக்டரிம் அவர் கோரிக்கை மனு கொடுத்தார்.
இதையடுத்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இதுகுறித்து விசாரிக்க ஆர்.டி.ஓ. மகராஜ் தலைமையில் நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா, தனி தாசில்தார் சங்கீதா ராணி ஆகியோர் அடங்கிய 3 பேர் குழுவை அமைத்தார்.
இந்த குழுவினர் கடந்த 10 நாட்களாக அந்த காப்பகத்தில் விசாரணை மேற்கொண்டு, அங்குள்ள பல்வேறு ஆவணங்களையும் சோதனை செய்தனர். காப்பகத்தை நடத்தி வந்த நிர்வாகி தஸ்தகீரிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்தனர்.
விசாரணை அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து இது தொடர்பான அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீருவிடம் தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையில், காப்பகத்தில் நிதி முறைகேடு நடந்துள்ளது. காப்பகத்தில் உள்ள முதியவர்களின் மருத்துவ தேவை மற்றும் பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. காப்பகத்தில் விதிமீறல்கள் நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறிக்கையை ஆய்வு செய்த கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, காப்பகத்தை நடத்தி வந்த நிர்வாகி தஸ்தகீர் உடனடியாக காப்பகத்தை விட்டு வெளியேறவும், நிதி சம்பந்தமான அனைத்து ஆவணங்கள், பதிவேடுகளை ஊட்டி நகராட்சி கமிஷனர் வசம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து ஆர்.டி.ஒ. மகராஜ், நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா, சமூகநலத்துறை அலுவலர் பிரவீனா, தாசில்தார் சரவணன் ஆகியோர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து காப்பகத்தை கையகப்படுத்தினர். காப்பகத்தின் முழு பொறுப்பையும் ஊட்டி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக இதனையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. காப்பக நிர்வாகியிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பள்ளி கல்லூரி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
- போலீசார் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் உடன் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. வருகிற 7-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் திருச்சியில் ஒரே நேரத்தில் 9 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
திருச்சி பாரதிதாசன் சாலை, மேலப்புதூர், மன்னார்புரம், சிங்காரத்தோப்பு, கருமண்டபம், கே.கே. நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 9 பள்ளிகளுக்கும், சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள 2 கல்லூரிகளுக்கும் அலுவலக மெயிலுக்கு நேற்று காலை 7.30 மணியளவில் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதில் வெடிகுண்டு வெடித்து சிதறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மதனகோபால் என்ற ஐ.டி.யில் இருந்து இந்த மெயில் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி கல்லூரி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து போலீசார் அந்தந்த பள்ளி, கல்லூரிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் உடன் சென்று சோதனை மேற்கொண்டனர். பின்னர் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. காட்டூரில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விடுமுறை விடப்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பள்ளி மற்றும் ஆச்சாரியா, காட்டூர் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆகியவை தவிர்த்து மிரட்டல் விடுக்கப்பட்ட 6 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகளுக்கு இ.மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் உடன் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 2-வது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பள்ளி கல்லூரி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மர்ம நபரை அடையாளம் காண தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை சேர்ந்த வாலிபர் ஒருவர் இரவு அதேப்பகுதியில் உள்ள ஒரு பெண் வீட்டிற்கு சென்று, கதவை தட்டியுள்ளார்.
இதையடுத்து, அந்த பெண் கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது வீட்டின் வெளியே ஒரு வாலிபர் நிர்வாணமாக நின்று கொண்டு, தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு அழைத்துள்ளார். மேலும் வரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் அந்த பெண் சத்தம் போட்டு அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அங்கு பொதுமக்கள் திரண்டு ஓடி வந்தனர்.
இதனை கண்ட அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அந்த பெண் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.
- பயணிகளுக்கு இருக்க வேண்டிய பாதுகாப்பு முற்றிலும் உத்தரவாதம் கொண்டதாக இல்லை.
- ரெயிலில் பயணிக்கவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.
திருச்சி:
பாதுகாப்பான பயணத்திற்கு பெரும்பாலான மக்கள் ரெயில் பயணங்களை தேர்வு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 50க்கும் மேற்பட்ட நெடுந்தூர விரைவு தொடர்வண்டிகளிலும், 100க்கும் மேற்பட்ட மின்தொடர் வண்டிகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.
நெடுந்தூரம் செல்பவர்கள் பஸ் பயணத்தைவிட ரெயில் பயணத்தை தான் அதிகம் விரும்புவார்கள். அதுவும் ஜன்னல் ஓரம் அமர்ந்து இயற்கையை ரசித்தபடி செல்வது தனி சுகம். கூட்டம் நெரிசல் இருந்தால் சிலர் படிகட்டுகள் அருகே அமர்ந்து செல்வதும் உண்டு. அவ்வாறு அமர்ந்து செல்பவர்கள் தங்களது செல்போன்களை பார்த்த படியே செல்கின்றனர்.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கொள்ளை கும்பல் ரெயில் பயணிகளிடம் செல்போன்கள், நகைகளை பறித்துக் கொண்டு ஓடிவிடுகின்றனர். இதனால் சிலர் தங்களது விலை உயர்ந்த செல்போன்களை பறிகொடுப்பதுடன் அதில் உள்ள முக்கிய ஆவணங்களையும் இழந்து தவிக்கின்றனர்.
இது குறித்து ரெயில் பயணிகள் கூறும்போது:
பஸ்சை விட ரெயில் பயணம் பாதுகாப்பானது என்று நினைத்து அதிகளவிலான பயணிகள் ரெயிலில் பயணிக்கின்றனர். ஆனால், அவர்களது நம்பிக்கையை சிதைக்கும் வகையில், சம்பவங்கள் தொடர்கின்றன.
ரெயில் பயணிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த கும்பல் ரெயில் வந்துநிற்கும் போது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருப்பவர்களை குறிவைத்து அவர்கள் அருகில் வந்து நின்று கொள்கிறார்கள். ரெயில் புறப்படும் போது அவர்களின் கவனத்தை திசை திருப்பி கழுத்தில் கிடக்கும் நகைகள், கையில் வைத்திருக்கும் செல்போன்களை பறித்துக் கொண்டு ஓடிவிடுகின்றனர்.
கடந்த 18-ந் தேதி சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக நெல்லை செல்லும் ரெயிலில், திருச்சி மாவட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரியும் முதல்நிலை காவலர் ஒருவர், திருச்சிக்கு பயணம் மேற் கொண்டார். இவர் ரெயில் படிக்கட்டு அருகே நின்று கொண்டு தனது மனைவியிடம் செல்போனில் பேசிக்கொண்டு வந்தார்.
விழுப்புரம் அருகே வந்த போது ரெயிலின் வேகம் குறைந்தது. அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் கல்லால் அவரை தாக்கி செல்போனை பறிக்க முயன்றனர். இதில் காவலரின் கண், பற்கள் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
பயணிகளுக்கு இருக்க வேண்டிய பாதுகாப்பு முற்றிலும் உத்தரவாதம் கொண்டதாக இல்லை.
இரவு நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களில் போதிய போலீசார் இல்லாததால், வழிப்பறி கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
பல ரெயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா வசதி இல்லாததால், அதை தங்களுக்கு சாதகமாக மர்ம கும்பல் பயன்படுத்தி கொள்கிறது. இதனால், ரெயிலில் பயணிக்கவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.
எனவே தமிழகத்தில் முக்கிய ரெயில் நிலையங்களாக உள்ள சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், கோவை, அரக்கோணம் ரெயில் நிலையங்கள் மற்றும் வேகம் குறைவாக செல்லும் இடங்களில் போதுமான ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டு திருட்டு சம்பவங்களை தடுத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்