தமிழ்நாடு

10-ம் கட்ட அகழாய்வு பணி: கீழடியில் செம்புப் பொருட்கள் கண்டெடுப்பு

Published On 2024-07-03 09:34 GMT   |   Update On 2024-07-03 09:34 GMT
  • மீன் உருவம் பொறிக்கப்பட்ட 2 பானை ஓடுகள் கண்டறியப்பட்டன.
  • மேற்புறம் சிவப்பு வண்ண பூச்சு பெற்ற பளபளப்பான இந்த ஓடுகளில் மீன் உருவத்தின் ஒரு பகுதி கிடைத்து இருக்கிறது.

திருப்புவனம்:

மதுரையை அடுத்த கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே மத்திய-மாநில அரசுகள் 9 கட்டமாக அகழாய்வு பணிகளை முடித்துள்ளன. இதில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவை சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய தமிழர்கள் பயன்படுத்தியவை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கீழடி, கொந்தகையில் 10-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. இதில் கீழடியில் உள்ள திறந்தவெளி அருங்காட்சியகம் அருகே 12 குழிகள் தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டு அளவீடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 2 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குழிகளில் ஏற்கனவே பல வண்ண நிறங்களில் பாசி, கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. 'தா' என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு பானை ஓடும் கண்டெடுக்கப்பட்டது.

குழிகள் மேலும் 3 அடி ஆழத்திற்கு மேல் தோண்டப்பட்ட நிலையில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட 2 பானை ஓடுகள் கண்டறியப்பட்டன.

மேற்புறம் சிவப்பு வண்ண பூச்சு பெற்ற பளபளப்பான இந்த ஓடுகளில் மீன் உருவத்தின் ஒரு பகுதி மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன. ஒன்று 5 செ.மீ. நீளமும், 4 செ.மீ. அகலமும் மற்றொன்று 4 செ.மீ. நீளமும், 3 செ.மீ. அகலமும் உள்ளது.

இந்த நிலையில் கீழடியில் நடைபெற்று வரும் 10-ம் கட்ட அகழாய்வில் தற்போது உடைந்த செம்புப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட செம்புப் பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். 

Tags:    

Similar News