தமிழ்நாடு

நடுவழியில் தீப்பிடித்து எரிந்த பேருந்து.. அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு

Published On 2024-07-03 08:02 GMT   |   Update On 2024-07-03 08:02 GMT
  • தீயை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி அலறியடித்து கொண்டு ஓடினர்.
  • ஓட்டுநர் என்ஜின் அருகே புகை வருவதை கவனித்தவுடன் பேருந்தை உடனடியாக நிறுத்தி, பயணிகளை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இறக்கிவிடப்பட்டது.

சென்னை :

போக்குவரத்து துறையில் டீசல் செலவை குறைப்பதற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தமிழக அரசு சார்பில் என்.எல்.ஜி. மற்றும் சி.என்.ஜி கியாஸ் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 13-ம் தேதி மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்திற்கு தலா 2 என்.எல்.ஜி. பஸ்களும், கும்பக்கோணம் போக்குவரத்துக் கழகத்திற்கு 2 சி.என்.ஜி பஸ்களும் வழங்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு கூடுதலாக ஒரு சி.என்.ஜி. பஸ் வழங்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, கடந்த ஜூன் 28-ம்தேதி முதல் பயணிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த சி.என்.ஜி. கியாஸ் நிரப்பப்பட்ட பஸ் சென்னை பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு (தடம் எண்-109 சி) பயணிகளுடன் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது அடையாறு பணிமனை அருகே உள்ள எல்.பி. சாலையில் பஸ் செல்லும்போது, எஞ்சினில் இருந்து திடீரென கரும்புகை வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி அலறியடித்து கொண்டு ஓடினர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் M/s. Torrent Gas Pvt Ltd σστ TN-01AN-1569 (ADC800) பேருந்து அங்கீகரிக்கப்பட்ட M/s. Chennai Auto Gas மையம் மூலமாக CNG (Retrofitment kit Conversion) மாற்றம் செய்யப்பட்டு 28.06.2024 அன்று முதல் தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் (02.07.2024) மதியம். ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் பேருந்தை தடம் எண் 102, பிராட்வே-லிருந்து 10 பயணிகளுடன் சிறுசேரி நோக்கி சென்று கொண்டு இருந்தபோது, மதியம் சுமார் 2.00 மணி அளவில் அடையார் பணிமனை அருகில் ஓட்டுநர் என்ஜின் அருகே புகை வருவதை கவனித்தவுடன் பேருந்தை உடனடியாக நிறுத்தி, பயணிகளை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இறக்கிவிடப்பட்டது.

காவல்துறை மற்றும் தீ அணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உதவியுடன் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு அருகில் இருந்த அடையாறு பணிமனைக்கு பேருந்து பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டது. மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, பேருந்தில் இருந்த பயணிகளுக்கும், அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் துரித நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

Tags:    

Similar News