தமிழ்நாடு

கோப்புப்படம்

உடலில் சத்து ஏற்ற ஒரே நேரத்தில் 15 சத்து மாத்திரைகளை சாப்பிட்ட மாணவனுக்கு உடல்நிலை பாதிப்பு

Published On 2024-11-22 09:18 GMT   |   Update On 2024-11-22 09:18 GMT
  • மாணவனுக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்படவே உடனடியாக ஆசிரியரிடம் தகவல்களை தெரிவித்துள்ளார்.
  • மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கடலூர்:

கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி பெரிய கண்ணாடி கிராமத்தை சேர்ந்த 12 வயது மாணவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இப்பள்ளியில் வாரந்தோறும் வியாழக்கிழமை சத்து மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம். நேற்று வியாழக்கிழமை காலை பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும். சத்து மாத்திரைகள் (போலிக் ஆசிட் இரும்பு சத்து மாத்திரை)அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாத்திரைகளை சாப்பிடாத மாணவர்கள் தண்ணீர் குடிக்கும் இடத்தில் மாத்திரைகளை வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தண்ணீர் குடிக்கும் இடத்திற்கு வந்த 8-ம் வகுப்பு மாணவன் ஒரே நேரத்தில் அதிக மாத்திரைகள் சாப்பிட்டால் உடம்பில் சத்து அதிகரிக்கும் என எண்ணி அங்கிருந்த 15 மாத்திரைகளை மொத்தமாக ஒரே நேரத்தில் உட்கொண்டு உள்ளார். இதில் மாணவனுக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்படவே உடனடியாக ஆசிரியரிடம் தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News