தமிழ்நாடு
null

அது வேற, இது வேற.. சீமான் கணக்கு - ஒரே குழப்பமா இருக்கே..!

Published On 2024-11-22 11:57 GMT   |   Update On 2024-11-22 12:00 GMT
  • நிலைப்பாட்டை இன்றுவரை மாற்றிக் கொள்ளாத அரசியல் தலைவராக சீமான் அறியப்படுகிறார்.
  • வாக்கு சதவீதம் ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான வளர்ச்சி.

நடிகரும், இயக்குநருமான சீமான் கடந்த 2010 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி "நாம் தமிழர்" என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும் நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியம் என்ற கொள்கையை கொண்டுள்ளது. திரைத்துறையில் இருந்து அரசியல்வாதியானவர்கள் பட்டியலில் இணைந்து கொண்ட சீமான், உணர்ச்சி பொங்க மேடையில் பேசுவதில் திறன் பெற்றவர். கட்சி தொடங்கியது முதலே தேர்தல் களத்தில் தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டை இன்றுவரை மாற்றிக் கொள்ளாத அரசியல் தலைவராக சீமான் அறியப்படுகிறார்.

தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்ற வேட்கை கொண்ட கட்சியாக நாம் தமிழர் அறியப்படுகிறது. இயற்கை விவசாயம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, தற்சார்பு பொருளாதாரம் என அரசியலில் பல்வேறு புதுமைகளை பற்றி பேசி வந்த போதிலும், தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சிக்கு இன்றுவரை வெற்றிக்கனி எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. எனினும், நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான வளர்ச்சியை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க., காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் என பலமுனை போட்டி நிறைந்த தமிழக அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒற்றை அடையாளமாக வலம் வருபவர், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அரசியல் பயணம் தொடங்கி பொது வாழ்வில் 'அரசியல்' பிரபலமாக அறியப்படும் சீமான்- தான் கூறும் கருத்துக்கள், அந்த கருத்துக்கு முரணான விளக்கங்களை கூறும் நபராகவும் அறியப்படுகிறார்.


 

தொடக்க காலங்களில் பெரியாரின் பேரன் என்று மேடைகளில் உருமிய சீமான், பின்னர் பெரியாரை ஒவ்வொரு மேடைகளிலும் வசைபாடவே செய்தார். இதேபோன்று, தி.மு.க. முன்னாள் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அதீத விமர்சனங்களை தவிர்த்த சீமான், பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு கலைஞர் கருணாநிதியை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். சீமானுக்கு முன்னதாக 2005 ஆம் ஆண்டிலேயே திரைத்துறையில் இருந்து அரசியலில் களம் புகுந்த கேப்டன் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியை தொடங்கி, தமிழ்நாடு அரசியலில் குறுகிய காலக்கட்டத்தில் அசுர வளர்ச்சி பெற்று எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தையும் பெற்றார்.

திரைத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த கேப்டன் விஜயகாந்த் அரசியலிலும் தொடர் வெற்றி பெற்று வந்தார். விஜயகாந்த் அரசியலை எதிர்த்து களம் கண்ட சீமான் பல்வேறு பிரசாரங்களில் விஜயகாந்த்-ஐ கடுமையாக விமர்சித்தார். விஜயகாந்த் தமிழரே இல்லை என்பதில் தொடங்கி விஜயகாந்த் பற்றி தரம்தாழ்ந்து தனிநபர் விமர்சனங்களாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கியவர் சீமான்.

கேப்டன் விஜயகாந்த்-க்கு முன்பே தமிழக அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் ரஜினிகாந்த். 1996 ஆம் ஆண்டு தன்னைத் தேடி வந்த அரசியல் வாய்ப்பை ஏற்க மறுத்த ரஜினிகாந்த், அதன்பிறகு பல்வேறு சமயங்களில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து வந்தார். ரஜினிகாந்த்-இன் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.

இதனை பூர்த்தி செய்யும் வகையில், அரசியல் கட்சியை அறிவித்த ரஜினிகாந்த் அதன்பிறகு அரசியலில் இருந்து விலகுவதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ரஜினிகாந்த்-இன் அரசியல் வருகைக்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்ற எண்ணத்தில் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்களுக்கு தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தார் சீமான். இதனிடையேதான் நேற்று சீமான் - ரஜினிகாந்த் சந்திப்பு நடந்தேறியது.


 

ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை ஒட்டி சீமான் முன்வைத்த விமர்சனங்கள்:

  • ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்.
  • 40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழகத்தில் இருந்ததால் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்றில்லை.
  • நாங்கள் எங்கள் மாநிலத்தை பார்த்துக் கொள்வோம், ரஜினி இங்கு செய்ய நினைப்பதை நாங்களே செய்து கொள்வோம்.
  • ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடித்து, சம்பாதிக்கலாம். அதைத் தாண்டி அவர் இந்த மாநிலத்தில் வேறு எதையும் செய்யக்கூடாது.
  • தமிழனாக பிறந்தவன் தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்ற சித்தாந்தம் நம்மிடம் உள்ளது.
  • நான் மட்டுமல்ல, திருக்குறளிலும் கூறப்பட்டுள்ளது.
  • யாரையும் ஆள விடாமல் இந்த அரசு அவமானத்தை சந்தித்துள்ளது. நாம் அனைவரும் சுயமரியாதையுடன் உயர்ந்து வருகிறோம்.
  • ரஜினிகாந்த் இன்னும் 10 படங்களில் நடித்தாலும் பிரச்சனை இல்லை. அவர் மாநிலத்தை ஆள விரும்புகிறார் என்பதில்தான் சிக்கலானது.
  • நம் மக்களை ஆள்வதற்கு நமக்கு உரிமை உண்டு, ஆனால் வேறொருவரின் ஆட்சியில் வாழ்வது அடிமைத்தனம். நாம் அடிமைகளாக இருக்க முடியாது.
  • தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கூறிய ரஜினிகாந்த்-க்கு சீமான் தரம்தாழ்ந்து விமர்சனம் செய்து இருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்த அறிவிப்புக்கு பின் சீமான் அவரை பல சமயங்களில் கடுமையாக விமர்சித்து இருந்தார். ரஜினிகாந்த் தெரிவித்த பல்வேறு கருத்துக்களுக்கு சீமான் தரம்தாழ்ந்து பேசியிருக்கிறார். அதன்பிறகு நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பயணத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்த பிறகு, சீமான் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு வருகிறார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இலத்திற்கு நேற்று (நவம்பர் 21) சென்ற சீமான் அவரை நேரில் சந்தித்தார். தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் களமிறங்கிய பிறகு சீமான் முதல்முறையாக ரஜினிகாந்த்-ஐ சந்தித்து இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.

 


நடிகர் ரஜினிகாந்த்-ஐ சந்தித்தது பற்றி பேசிய சீமான் கூறியதாவது..,

தமிழக அரசியல் பற்றி பேசும் போது ரஜினிகாந்த் system wrong-னு ஆங்கிலத்தில் சொன்னார். அதை நான் தமிழில் அமைப்பு தப்பா இருக்கு மாத்தனும்னு சொன்னேன். இதுகுறித்து நாங்கள் பேசினோம்.

ரஜினிகாந்த் சொல்கிற தமிழக அரசியலில் வெற்றிடம் இன்னமும் இருக்கிறது.

ரஜினிகாந்த்-இன் அரசியல் வருகையின் போது அவரை கடுமையாக எதிர்த்த சீமான், தற்போது அவரை நேரில் சந்தித்து இருப்பது அவரின் கருத்துக்கள் சரிதான் என்று கூறுவது ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சி அடையவும், அரசியல் விமர்சகர்கள், அரசியலை பின்பற்றும் பொது மக்களை கூர்ந்து கவனிக்கவும் செய்துள்ளது.

முன்னதாக நடிகர் விஜய் அரசியல் கட்சியை அறிவித்தது முதல் அவருக்கு ஆதரவு தெரிவித்து தம்பியாக உறவாடி வந்த சீமான், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு பிறகு அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார். த.வெ.க. கட்சியின் கொள்கை தங்களுக்கு முரணாக இருப்பதாக கூறிய சீமான், த.வெ.க. தலைவர் விஜய்யை தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார்.

பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள அரசியல் தலைவர் சீமான், தனக்கென பெரும் இளைஞர் படையை வழிநடத்தி வருகிறார். நாம் தமிழர் கட்சிக்கு இளைஞர் பட்டாளத்தின் வாக்கு வங்கியாக கொண்டுள்ள சீமான், சக அரசியல் தலைவர்கள் பற்றி முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறாரோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஆழமாக எழத்தொடங்கியுள்ளது.

மக்கள் இதை கணிக்கும் முன்பே அவருடன் அரசியல் களத்தில் போராடி வரும் சக நாம் தமிழர் தோழமைகளும் கூட சமீப காலங்களில் சீமானின் அரசியல் கருத்துக்களை பின்பற்றி கட்சியில் தொடர முடியாமல் அக்கட்சியில் இருந்து பெரும் படையுடன் வெளியேறி வருகின்றனர்.

Tags:    

Similar News