null
முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வைக்கும் த.வெ.க. தலைவர் விஜய்
- த.வெ.க. கட்சி அலுவலகத்தில் ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
- மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்தார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்தார்.
இந்த மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் பல்வேறு நில உரிமையாளர்களின் விவசாய நிலங்களும் அடங்கும். அதனை மாநாட்டிற்கு பயன்படுத்திவிட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்து கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், த.வெ.க. கட்சியின் முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய், நாளை விருந்து அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
விருந்தில் நில உரிமையாளர்கள், விவசாயிகள் அவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள உள்ளனர் என்று கூறப்படுகிறது. த.வெ.க. கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு இடம் கொடுத்து உதவிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விருந்துக்கு அக்கட்சி தலைவர் விஜய் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.