3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது... மாநில கல்வி கொள்கையில் நீதிபதி முருகேசன் பரிந்துரை
- தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் படி தற்போது உள்ள நடைமுறையே தொடரும். அதாவது 5 வயது பூர்த்தியானால் 1-ம் வகுப்பில் சேர்க்கலாம்.
- உயர் கல்வியில் தேர்வுகளை புத்தகத்தின் உதவி கொண்டு எழுதுவதை அனுமதிக்கலாம்.
சென்னை:
தமிழ்நாடு மாநிலத்திற்காக கல்வி கொள்கையை உருவாக்க டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவின் உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர், ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவன ஓய்வுபெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் ராமானுஜம், மாநில திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் யூனி செப் முன்னாள் சிறப்பு கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அகரம் அறக்கட்டளை ஜெயஸ்ரீ உள்ளிட்ட 14 பேர் இதில் இடம் பெற்றிருந்தனர்.
அனைவருக்கும் உள்ள கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதலை அடிப்படையாக கொண்டு மாநில கல்வி கொள்கையை தயார் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக் கொள்கையை தயாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகளை வழங்கினார்கள்.
600 பக்கங்கள் கொண்டதாக அதன் அறிக்கை உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய பரிந்துரைகள் என்னென்ன என்ற விவரம் வருமாறு:-
3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் வைக்க கூடாது. பிளஸ்-1 பொதுத் தேர்வை தொடர வேண்டும். கல்லூரிகளில் சேருவதற்கு பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண் மட்டும் போதாது. பிளஸ்-1 மதிப்பெண்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலம் இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும். நீட் தேர்வை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
தேசிய கல்வி கொள்கையில் தெரிவித்துள்ளதை போல மாணவர்கள் உயர் கல்வி படிக்கின்றபோது படிப்பதில் இருந்து பாதியில் வெளியேறி விட்டு மீண்டும் அதே படிப்பில் தொடரும் வழிமுறையை தமிழகத்தில் பின்பற்ற தேவையில்லை.
முதலாம் ஆண்டு மட்டும் படித்துவிட்டு பாதியில் வெளியேறினால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கிடவும், 2-ம் ஆண்டில் வெளியேறினால் அவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ், 3-ம் ஆண்டில் வெளியேறினால் அவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும் என தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்டு உள்ளது. அதனை மாநில கல்விக் கொள்கை நிராகரிக்கிறது.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள் தான் முதல் வகுப்பில் சேர முடியும் என உள்ளது.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் படி தற்போது உள்ள நடைமுறையே தொடரும். அதாவது 5 வயது பூர்த்தியானால் 1-ம் வகுப்பில் சேர்க்கலாம்.
தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படும் விளையாட்டுப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் நர்சரிகள், மழலையர் பள்ளி போன்றவற்றின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக ஒரு விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்படுவதோடு, மாணவர்கள் 10-ம் வகுப்பில் வாரிய தேர்வுகளை எடுக்கும் வரை, பள்ளி அளவில் மட்டுமே தேர்வுகள் இருக்க வேண்டும்.
முந்தைய நிலைகளில் மையப்படுத்தப்பட்ட தேர்வுகள் இருக்க கூடாது.
கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள் மற்றும் முறையான பயிற்சி விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பயிற்சி முகாம்கள் மற்றும் விளையாட்டு தடகள நிகழ்வுகளில் கலந்து கொள்ள திறமையான மாணவர்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டும்.
உயர் கல்வியில் தேர்வுகளை புத்தகத்தின் உதவி கொண்டு எழுதுவதை அனுமதிக்கலாம்.
நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.
மாநிலத்தில் குழந்தைகள் மேம்பாட்டு மையங்களை ஒரே ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் கொண்டு வருவது முறையான நிர்வாகத்திற்கு அவசியம்.
அனைத்து தாய்-சேய் குழந்தை பராமரிப்பு மையம் மற்றும் அது தொடர்பான நிறுவனங்களை ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டு வர பரிந்துரைக்கிறது.
ஸ்போக்கன் இங்கிலீஷ் தவிர ஸ்போக்கன் தமிழ் மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும்.
போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு மனநல ஆலோசகர் ஒரு சுகாதார அதிகாரி, ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒரு உறுப்பினர் ஆகியோரை கொண்ட தகுந்த வழிகாட்டுதல்களுடன் தனிக்குழு அமைக்க வேண்டும்.
இரு பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.