நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் 5-ந்தேதி இபிஎஸ் மரியாதை செலுத்துகிறார்
- புதுச்சேரி மாநிலத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிட நுழைவாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாள் வருகிற 5-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது.
அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்க உள்ளனர். புதுச்சேரி மாநிலத்திலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 5-ந் தேதி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகளும் திரண்டு வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
அதனையடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிட நுழைவாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி வாசிக்க அதை அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அவரவர் பகுதிகளில் அன்னதானம் வழங்குகிறார்கள்.