எருமேலி, புல்மேடு வனப்பாதையில் இன்று முதல் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி
- கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் குமுளி, சத்திரம், புல்மேடு, எருமேலி, முக்குழி, சபரிமலை பாதைகளில் பக்தர்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
- பத்தினம்திட்டா மாவட்டத்தில் மழை குறைந்துள்ள போதிலும் கடும் குளிர் வாட்டி வருகிறது.
கூடலூர்:
கேரள மாநிலத்தில் 4 மாவட்டங்களுக்கு நவம்பர் 30-ந் தேதி முதல் நேற்று வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் அவ்வப்போது கனமழையும், சாரல் மழையும் பெய்து வந்தது.
சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்திலும் கனமழை பெய்து பம்பையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால் பக்தர்கள் எவ்வித சிரமமின்றி சாமி தரிசனம் செய்து திரும்பினர்.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் குமுளி, சத்திரம், புல்மேடு, எருமேலி, முக்குழி, சபரிமலை பாதைகளில் பக்தர்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2ந் தேதி முதல் இந்த பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தற்போது கனமழை குறைந்துள்ளதால் 2 நாட்களுக்கு பிறகு புல்மேடு பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக புல்மேடு பாதையில் பயணம் செய்வதற்காக சத்திரம் வந்த நூற்றுக்கணக்கான பக்தர்களை கேரள அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் மூலம் பம்பைக்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது மண்டல பூஜையின்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில் அதனை எதிர்கொள்ள தேசிய பேரிடர் நிவாரணப்ப டையினர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மழை குறித்து முன் அறிவிப்பு வந்ததும் பம்பையில் செய்ய வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்து போலீஸ், தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் நிவாரண படையினர் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு பிறகு புல்மேடு பாதையில் இன்று காலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் ஆர்வத்துடன் அதில் பயணம் செய்தனர்.
பத்தினம்திட்டா மாவட்டத்தில் மழை குறைந்துள்ள போதிலும் கடும் குளிர் வாட்டி வருகிறது. இதனால் பக்தர்களை பாதுகாக்க தேவசம்போர்டு சார்பில் சுக்கு உள்ளிட்ட மூலிகை கலந்த குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நடைபந்தல், சன்னிதானத்தில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு இந்த மூலிகை குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கடும் குளிர் மற்றும் பனியால் பக்தர்களின் உடல்நலம் பாதிக்காமல் இருக்கவும், புத்துணர்வு ஏற்படவும் மூலிகை குடிநீர் வழங்கப்படுவதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.