தமிழ்நாடு

ஆய்வுக்கு பின் குழுவினர் கோவில் கருவறையில் இருந்து வெளியே வந்த காட்சி.

பழனி கோவிலில் நவபாஷாண சிலையை ஆய்வு செய்த முன்னாள் நீதிபதி தலைமையிலான குழுவினர்

Published On 2024-12-04 07:04 GMT   |   Update On 2024-12-04 09:21 GMT
  • கருவறைக்குள் சுமார் 30 நிமிடத்துக்கும் மேல் சோதனை நடத்தப்பட்டது.
  • தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர்களுக்கு சுமார் 40 நிமிடம் தடை விதிக்கப்பட்டது.

பழனி:

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் நாள்தோறும் வருகை தருகின்றனர்.

இங்குள்ள கருவறையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறது. இது பழனி மலை முருகனின் தனிச்சிறப்பாகும்.

நவபாஷாண சிலை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் வெளிவந்த நிலையில் சிலையின் உறுதிதன்மை குறித்து ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சார்பில் சிறப்புக்குழுவை அமைக்க உத்தரவிட்டது.

அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி பொன் காளியப்பன் தலைமையில் ஐ.ஐ.டி. குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி இன்று பழனி கோவிலுக்கு வந்த முன்னாள் நீதிபதி பொன் காளியப்பன், ஸ்தபதி தட்சிணாமூர்த்தி கொண்ட குழுவினர் இது குறித்து தேவஸ்தான நிர்வாகிகளிடம் எடுத்துக் கூறினர்.

இதனைத் தொடர்ந்து கால பூஜைகளுக்கு பின்பு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு அந்தக்குழுவினர் கருவறைக்குள் சென்று சோதனை நடத்தினர். கருவறைக்குள் சுமார் 30 நிமிடத்துக்கும் மேல் சோதனை நடத்தப்பட்டது.

இதனால் தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர்களுக்கு சுமார் 40 நிமிடம் தடை விதிக்கப்பட்டது. சோதனை முடிந்த பிறகு அதிகாரிகள் தங்களது அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கருவறைக்குள் நவ பாஷாண சிலையை அதிகாரிகள் ஆய்வு செய்த சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News