தமிழ்நாடு

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று நிவாரணம் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்

Published On 2024-12-03 13:29 GMT   |   Update On 2024-12-03 13:29 GMT
  • ஆறுதல் கூறியும் நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
  • த.வெ.க. அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியும் நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சென்னை பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து நிவாரண பொருட்களை விஜய் வழங்கினார்.

நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பில் வேஷ்டி, சட்டை, பெட்ஷீட், மளிகை சாமான்கள் என ஒரு குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் வந்து நிவாரணம் வழங்காதது ஏன்? என்று நிவாரண உதவிகளை பெற்றுக் கொண்டவர்களிடம் விஜய் விளக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அப்போது, உங்கள் வீடுகளுக்கு வந்து நலத்திட்ட உதவிகளை நான் வழங்கி இருக்கலாம். ஆனால், உங்களுடன் இப்படி அமர்ந்து பேச முடியாது, அங்கு வந்தால் நெரிசல் ஏற்படும். உங்கள் அனைவரிடமும் சிரமம் இல்லாமல் பேச முடியாது. நேரம் செலவிட முடியாது. நேரில் வந்து நிவாரணம் வழங்கவில்லை என தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், என்று விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News