தமிழ்நாடு

மண் சரிவில் உயிரிழந்த 7 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் எ.வ.வேலு

Published On 2024-12-04 04:55 GMT   |   Update On 2024-12-04 04:55 GMT
  • பாறைகளும் அடுத்தடுத்து வீட்டின் மீது விழுந்தன.
  • 5 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன.

திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக 2 நாட்களுக்கும் மேலாக இடைவிடாது பலத்த மழை பெய்தது. இந்த மழையானது, மலையையே அசைக்கும் அளவுக்கு வெளுத்து வாங்கியது.

இந்த நிலையில் அண்ணாமலையார் என பக்தர்களால் அழைக்கப்படும் மலையில் வ.உ.சி.நகர் பகுதிக்கு மேலே உள்ள ராட்சத பாறைகள் திடீரென பயங்கர சத்தத்துடன் உருண்டு கீழ்நோக்கி வந்தன.

அதன் காரணமாக பாறைக்கு கீழே உள்ள மண் பெயர்ந்து அருவிபோல ஆக்ரோஷமாக வ.உ.சி.நகர் வீடுகளை நோக்கி பொலபொலவென சரிந்ததில் 2 வீடுகளுக்குள் புகுந்து அந்த வீடுகளே மண்ணுக்குள் புதைந்தன. அதுமட்டுமின்றி அத்துடன் பாறைகளும் அடுத்தடுத்து வீட்டின் மீது விழுந்தன

அப்போது ஒரு வீட்டில் இருந்தவர்கள் வெளியேறி விட்டனர். மற்றொரு வீடு கண் இமைக்கும் நேரத்தில் மண் சரிவில் சிக்கியது.

இந்த மண் சரிவில் புதைந்து 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 5 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. மீதமுள்ள 2 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது.

பிரேத பரிசோதனை நிறைவடைந்த பின்னர் நேற்று இரவு 7 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறந்தவர்களின் உடல்களை கண்ட அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர். அது காண்போர் அனைவரின் கண்களையும் கலங்க செய்தது.

 

இந்நிலையில் மண் சரிவில் உயிரிழந்த 7 பேரின் உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி அஞ்சலி செலுத்தினர்.

7 பேரின் உடலை பார்த்து அமைச்சர் எ.வ.வேலு கண் கலங்கினார். உயிரிழந்த 7 பேரின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

Tags:    

Similar News