உள்ளூர் செய்திகள்

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மணிமுத்தாறு சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தம்

Published On 2024-07-01 09:45 GMT   |   Update On 2024-07-01 09:45 GMT
  • பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
  • மாஞ்சோலை செல்வதற்கு வனத்துறை சார்பில் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கி ஆகஸ்டு 7-ந் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை உறுதிப்படுத்தப்படும் வரை தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஏற்கனவே தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுக்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டதால் தொழிலாளர்கள் கடந்த 15-ந் தேதி முதல் வேலையின்றியும், ஊதியம் இல்லாமலும் அங்குள்ள குடியிருப்புகளில் தங்கி உள்ளனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் புதிய தமிழக கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி இன்று மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திப்பதற்காக சென்றார். அப்போது அவரது காரை மணிமுத்தாறு சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவரது கட்சியினர் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

மாஞ்சோலை செல்வதற்கு வனத்துறை சார்பில் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணசாமி மற்றும் அவரது கட்சியினர் உரிய அனுமதி இல்லாமல் அதிகமான வாகனங்களில் சென்றதால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியுடன் போலீஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News