மறைமலைநகரில் மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி மோதி 4 பேர் பலி
- லாரி மோதியதில் மோட்டார் சைக்கிள்கள் தூள், தூளாக நொறுங்கி கிடந்தன.
- விபத்து தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
வண்டலூர்:
சென்னை மறைமலைநகர் அருகே பொத்தேரி பகுதியில் இன்று காலை லாரி மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொத்தேரி வழியாக செங்கல்பட்டு நோக்கி இன்று காலை (வெள்ளிக்கிழமை) 10 மணியளவில் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.
பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி அருகே வாகன ஓட்டிகள், பொது மக்கள் சாலையை கடந்து செல்ல பாதை உள்ளது. அதில் சாலையை கடப்பதற்காக 10-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளிலும், நடந்தும் செல்ல காத்திருந்தனர்.
அப்போது அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கடந்து செல்ல காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் புகுந்தது.
தாறுமாறாக ஓடிய லாரி 3 மோட்டார்சைக்கிள்களில் இருந்தவர்கள் மற்றும் நடந்து செல்ல இருந்தவர்கள் மீது மோதி அருகில் இருந்த சிக்னல் கம்பத்தை இடித்து தள்ளிவிட்டு சர்வீஸ் சாலை தடுப்பு சுவரில் மோதி நின்றது.
இந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 5-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பலியானவர்களின் உடல்கள் சாலையில் சிதறி கிடந்தன. அப்பகுதி முழுவதும் ரத்தமாக காணப்பட்டது.
மேலும் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிள்கள் தூள், தூளாக நொறுங்கி கிடந்தன.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 5-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அதிவேகத்தில் லாரியை டிரைவர் ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரிகிறது. பலியானவர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. அவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
விபத்து தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
இந்த கோர விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.