ராணுவ வீரரின் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.14 லட்சம் திருட்டு
- தாழையூத்து பஜாருக்கு வந்த முத்துராஜ், தனது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் ரூ.14 லட்சம் வைத்திருந்தார்.
- மர்மநபர்கள் திருடிச்சென்றதை அறிந்த முத்துராஜ் உடனடியாக தாழையூத்து போலீசில் புகார் அளித்தார்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் முத்துராஜ்(வயது 32). இவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2-ந்தேதியில் இருந்து ஒரு மாத விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு வந்த இவர் நேற்று மதியம் ஒட்டப்பிடாரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்தார். டவுன் ஸ்ரீபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ.14 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஒட்டப்பிடாரத்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
நெல்லையை அடுத்த தாழையூத்து பஜாருக்கு வந்த முத்துராஜ், தனது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் ரூ.14 லட்சம் வைத்திருந்தார்.
அதனை அப்படியே வைத்து விட்டு சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் பஜாரில் உள்ள ஒரு கடைக்கு சென்று பழங்கள் வாங்கிவிட்டு திரும்பவும் மோட்டார் சைக்கிள் அருகே வந்தார்.
அப்போது கவரில் வைத்திருந்த ரூ.14 லட்சம் பணத்தை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மர்மநபர்கள் திருடிச்சென்றதை அறிந்த முத்துராஜ் உடனடியாக தாழையூத்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சீதாலெட்சுமி வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.
முத்துராஜ் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துவிட்டு வெளியே வந்தபோதில் இருந்து மர்மநபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்ததும், அவர் பழக்கடைக்கு சென்றதை நோட்டமிட்டு அவர்கள் கைவரிசை காட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.