தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்
- லாரியில் இருந்த கிளீனர் திரேஸ்புரம் மாதவ நாயர் காலனியை சேர்ந்த அஜய் (வயது 24) என்பவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கைப்பற்றப்பட்ட பீடி இலை பண்டல்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் கியூ பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து 'கியூ' பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ் , செல்வகுமார், ராமச்சந்திரன், தலைமை காவலர் இருதயராஜ், ராமர், காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வடபாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையில் அதிகாலை 3.30 மணிக்கு மினிலாரியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பைபர் படகில் சுமார் 35 கிலோ எடை கொண்ட 40 பண்டல்களில் பீடி இலைகள் கடத்தி செல்ல இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை போலீசார் கைப்பற்றினர்.
தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு, மினி லாரி ஆகியவற்றை கைப்பற்றினர். லாரியில் இருந்த கிளீனர் திரேஸ்புரம் மாதவ நாயர் காலனியை சேர்ந்த அஜய் (வயது 24) என்பவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலை பண்டல்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் கியூ பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் எடை சுமார் 1400 கிலோ. இதன் மதிப்பு 20 லட்சம் ஆகும்.