ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம்!
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
- புழல் சிறைக்கு மாற்றுவது தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5- ந்தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பட்டினப்பாக்கத்தில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் வடசென்னை தாதா நாகேந்திரன் உள்பட 28 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2 வாரங்களுக்கு முன் எழும்பூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இருந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். இன்று நடந்த முதல் கட்ட விசாரணையில், 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை டிசம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ரவுடி நாகேந்திரன் தன்னை வேலூர் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்ற உத்தரவிடுமாறு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். தனக்கு கல்லீரல் பாதிப்பு உள்ளதால் நீண்ட நேரம் பயணம் செய்ய முடியாது என மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரவுடி நாகேந்திரனை புழல் சிறைக்கு மாற்றுவது தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.