மருத்துவப் படிப்பிற்கான 7.5 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில் சேலம் மாணவி முதலிடம்
- சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அர்ச்சனா 6-ம் இடம் பிடித்துள்ளார்.
- தேர்வில் வெற்றி பெற வேண்டும் என ஒரே நோக்கத்தில் கடுமையாக படித்ததாக மாணவி கிருத்திகா கூறியுள்ளார்.
சேலம்:
2023-2024-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்ற மாணவ, மாணவியர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீடு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 வகையான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அர்ச்சனா 6-ம் இடமும் பிடித்துள்ளார். அவர் நீட் தேர்வில் 537 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இந்த இரண்டு மாணவிகளும் சேலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மாணவி கிருத்திகா கூறுகையில், சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தேன். நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். டாக்டர் ஆக வேண்டும் என லட்சியமாக இருந்தது. இதனால் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என ஒரே நோக்கத்தில் கடுமையாக படித்தேன்.
ஆசிரியர்கள், ஆசிரியைகள், நன்கு பயிற்சி அளித்தனர். மேலும் பெற்றோர், என்னை ஊக்குவித்தனர். இதனால் என்னால் வெற்றி பெற முடிந்தது. அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எனக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.