உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் வழங்க வருகிற 25-ந்தேதி முதல் சிறப்பு முகாம்

Published On 2022-07-21 09:46 GMT   |   Update On 2022-07-21 09:46 GMT
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தனிநபர் கடன் திட்டம், மகளிருக்கான புதிய பொற்கால கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கறவை மாடு கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்கண்ட தேதிகளில் நடைபெற உள்ளது.

வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் 26-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், வாலாஜாபாத் 27-ந்தேதி (புதன்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், ஸ்ரீபெரும்புதூர் 28-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், குன்றத்தூர் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று வட்டாட்சியர் அலுவலகம், உத்திரமேரூரில் முகாம் நடைபெறுகிறது.

எனவே மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்கள் (கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News