உள்ளூர் செய்திகள்

காலையில் படிப்பு, மாலையில் திருட்டு: மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கைவரிசை காட்டிய 6 மாணவர்கள் கைது

Published On 2022-07-25 06:28 GMT   |   Update On 2022-07-25 09:40 GMT
  • மதுரை மாவட்டத்தில் அண்மை காலமாக பள்ளி மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • தனிப்படை போலீசார் மதுரையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை:

மதுரை மாவட்டத்தில் அண்மை காலமாக பள்ளி மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வழிப்பறி, நகை பறிப்பில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்துக் கொண்டு உல்லாசமாக பொழுதை கழிக்கும் சிறுவர்கள் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் ஆலோசனை பேரில், எஸ்.எஸ்.காலனி குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சங்கீதா அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மதுரையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவத்தன்று இரவு தனிப்படையினர் காளவாசல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டடனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் போலீசார் மறித்தும் அங்கிருந்து வேகமாக சென்றனர். இதனால் சந்தேகமடைந்த தனிப்படை போலீசார் அவர்களை விரட்டிச்சென்று பிடித்தனர். சிக்கிய அனைவரும் 17 வயதுக்குட்பட்ட பிளஸ்-2 மாணவர்கள் ஆவார்கள்.

5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு சென்று உரிய முறையில் விசாரணை நடத்தியதில் மதுரை, அலங்காநல்லூர், சமயநல்லூர், நாகமலைபுதுக்கோட்டை மற்றும் சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு, செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

காலையில் பள்ளிக்கு செல்லும் இவர்கள் மாலையில் இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மோட்டார் சைக்கிளை திருடும் இந்த கும்பல் அதனை திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வேலம்மாள் நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் அஜித்குமார் (23) என்பவரிடம் கொடுத்து கள்ளச்சந்தையில் விற்று பணம் பெற்று வந்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் பிளஸ்-2 மாணவர்கள் 5 பேர் மற்றும் அஜித்குமாரை கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில், சிறு வயதிலேயே எங்களுக்கு மது பழக்கம் ஏற்பட்டது. இதனால் பணம் தேவைப்பட்டது.

எனவே காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் சிறு, சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டோம். ஆனால் எங்களுக்கு பணம் போதவில்லை. எனவே மோட்டார் சைக்கிள் திருட்டு, செல்போன் பறிப்பில் ஈடுபட்டோம். இதனால் எங்களுக்கு கணிசமாக பணம் கிடைத்தது. அதனை வைத்துக் கொண்டு மதுபானம், ஆடம்பர வாழ்க்கை என உல்லாசமாக இருந்தோம். மேலும் காதலிகளுடன் கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களுக்கு சென்று திருடிய பணத்தை செலவழித்தோம் என தெரிவித்தனர்.

மதுரை நகரில் கடந்த வாரத்தில் மட்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 17 வயதுக்குட்பட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த திருட்டு கலாச்சாரம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News