ஸ்ரீவைகுண்டம் அருகே சிலம்பம் கற்றுக்கொடுக்கும் அரங்கத்திற்கு திடீரென வந்த பிரான்ஸ் நாட்டினர்
- மாணவ-மாணவிகளுக்கு சண்முகசுந்தரம் சிலம்பம் கற்றுக்கொடுத்தார்.
- பிரான்ஸ் நாட்டினர் தங்களுக்கும் சிலம்ப கலையை கற்று கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திரு நகரியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். (வயது 70).
இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது ஆழ்வார்திருநகரியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக்கொடுத்து வருகிறார்.
நேற்று ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி பகுதியில் மழை பெய்த காரணத்தினால் அங்குள்ள சிறு அரங்கத்தில் மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாதலங்களை பார்வையிடுவதற்காக வருகை தந்தனர். அவர்கள் ஏரல் அருகே உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் திடீரென மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பம் சொல்லி கொடுப்பது குறித்து அறிந்த அவர்கள் நேரடியாக 20 பேரும் வருகை தந்தனர்.
காலையில் மழை அதிகமாக பெய்த காரணத்தினால் அரங்கத்திற்குள் நுழைந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை சிலம்ப ஆசான் சண்முகசுந்தரம் வரவேற்றார்.
பிரான்ஸ் நாட்டினர் முன்னிலையில் மாணவ-மாணவிகளுக்கு சண்முகசுந்தரம் சிலம்பம் கற்றுக்கொடுத்தார்.
அதை பார்த்து ஆச்சரியப்பட்ட பிரான்ஸ் நாட்டினர் தங்களுக்கும் சிலம்ப கலையை கற்று கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
உடனே அதே இடத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நெடுங்கம்பு, நடுகம்பு மற்றும் ரெங்கராட்டினத்தைச்சுற்றி பயிற்சி அளித்தார். சிறிது நேரத்திலேயே சிலம்ப கலையைக்கற்றுக்கொண்ட பிரான்ஸ் நாட்டினர், ரெங்கராட்டினத்தை தானாகவே சுற்றி அசத்தினர்.
அப்போது உடன் இருந்த மாணவ-மாணவிகளும், அங்கு வந்த பிரான்ஸ் நாட்டினரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.