தற்காலிக டிரைவர் ஓட்டி சென்ற அரசு பஸ் கார் மீது மோதி விபத்து
- காரின் பின் பகுதி சேதமடைந்தது. இருப்பினும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.
- விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடலூர்:
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கி இன்று 2-வது நாளாக நீடித்து வருகின்றது.
இதனால் தடையின்றி 100 சதவீத பஸ்களை இயக்கும் நோக்கில் போக்குவரத்து துறை, தற்காலிக டிரைவர்கள் மூலம் பஸ்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் கடலூரிலும் நேற்று தற்காலிக ஊழியர்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்காலிக டிரைவர் வெங்கடேசன் என்பவர் கடலூர் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து அரசு பஸ்சை இயக்கிக் கொண்டு அண்ணா பாலம் வழியாக சென்றார்.
அப்போது சீமாட்டி சிக்னல் சாலையில் இருந்து ஜவான்பவன் சாலைக்கு திரும்புவதற்காக நின்று கொண்டிருந்த காரின் பின்பகுதியில் வெங்கடேசன் ஓட்டிச்சென்ற பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் காரின் பின் பகுதி சேதமடைந்தது. இருப்பினும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அரசு பஸ்சை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.
இதேபோல கடலூரிலிருந்து விருத்தாச்சலத்திற்கு இன்று காலை தற்காலிக பஸ் டிரைவர் ஒருவர் அரசு பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர்-சிதம்பரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எந்தவித அச்சமும் இன்றி, அரசு உத்தரவை கடைபிடிக்காமல் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்போன் பேசிக்கொண்டு சென்றார். கடுமையான போக்குவரத்து பாதிப்பு உள்ள சாலையில் அரசு பஸ்சை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பஸ்சில் பயணம் செய்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து பார்த்தனர். மேலும், நிரந்தர போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்காலிக டிரைவர்களை கொண்டு அரசு பஸ் இயங்கி வரும் நிலையில், பஸ் இயங்கினால் போதும் என்ற நிலைப்பாட்டில் அதிகாரிகள் இருப்பதால் இதுபோன்ற நிலை உருவாகி உள்ளது. உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.