பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி மேலூரில் கடையடைப்பு
- விவசாயத்திற்கு வைகை ஆற்றிலும், பெரியாறு கால்வாயிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
- அ.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும், பல்வேறு தரப்பினர் ஆதரவும் தெரிவித்திருந்தனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்கள் விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ளது. பெரியாறு பாசன கால்வாயின் தண்ணீரை நம்பி இங்கு 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. ஒருபோக பாசன பகுதியான இங்கு வருடந்தோறும் ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி பெரியாறு கால்வாயில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பெரியாறு மற்றும் வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயத்திற்கு வைகை ஆற்றிலும், பெரியாறு கால்வாயிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் 80 சதவீத விவசாயம் பெரியாறு பாசன கால்வாய் மூலம் நடந்து வருகிறது. தற்போது மதுரை மாவட்டம் பேரணை முதல் கள்ளந்திரி வரை உள்ள பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் கால்வாயின் கடை மடை பகுதியான மேலூர் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள நிலையில் தங்கள் பகுதிக்கு மட்டும் அதிகாரிகள் தண்ணீர் திறக்காமல் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்தது.
மேலூர் ஒருபோக பாசன விவசாய சங்க தலைவர் முருகன் தலைமையில் விவசாயிகள் அரசு அதிகாரிகளை சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் மேலூரில் உள்ள பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
பெரியாறு கால்வாய் தண்ணீரை நம்பி பயிரிட்டு உள்ள விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஒரு போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தொடர் கோரிக்கையை வலியுறுத்தி மேலூரில் இன்று (27-ந்தேதி) கடையடைப்பு மற்றும் முற்றுகை போராட்டம் நடத்துவது என விவசாயிகள் முடிவு செய்தனர். இதற்குமேலூர் வர்த்தக சங்கத்தினர், வியாபாரிகள் மற்றும் அ.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும், பல்வேறு தரப்பினர் ஆதரவும் தெரிவித்திருந்தனர்.
அதன்படி இன்று பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி மேலூரில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலூர் பஸ் நிலையம், பஜார் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல சரக்கு, நகை, ஜவுளிக் கடைகள் மூடப்பட்டிருந்தன. தினசரி மார்க்கெட்டும் இன்று செயல்படவில்லை. 90 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்தனர். கடையடைப்பு போராட்டத்தால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இன்று காலை யூனியன் அலுவலகம் எதிரே உள்ள மூவேந்தர் பண்பாட்டு கழக திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்.
அவர்கள் அங்கிருந்து பேரணியாக பொதுப் பணித்துறை அலுவலகத்திற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அரசுக்கு எதிராகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோஷமிட்டனர். விவசாயிகளின் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தண்ணீரை பீச்சியடிக்கும் வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.