உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக இன்று பதவி ஏற்றார்

Published On 2023-05-11 05:08 GMT   |   Update On 2023-05-11 07:33 GMT
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று நேற்று முன்தினம் இரவு கவர்னர் மாளிகையில் இருந்து அமைச்சரவை மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
  • கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் இருக்கைகள் போடப்பட்டு அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டன.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ந் தேதி பதவி ஏற்றது.

அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 35 பேர் பொறுப்பில் உள்ளனர்.

கடந்த ஆண்டு 2 தடவை அமைச்சரவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றி அமைத்தார். முதல் மாற்றத்தின்போது ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்து துறை சிவசங்கருக்கு மாற்றப்பட்டது.

2-வது முறை அமைச்சரவை மாற்றத்தின் போது உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

மேலும் கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. இது தவிர வீட்டு வசதி துறையில் இருந்து சி.எம்.டி.ஏ. பிரிக்கப்பட்டு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவிடம் கொடுக்கப்பட்டது.

தி.மு.க. அரசு 3-வது ஆண்டை தொடங்கியுள்ள நிலையில் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் வரும் என்று தகவல்கள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரை விடுவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். அதேசமயத்தில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி எம்.எல்.ஏ.வு மான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று நேற்று முன்தினம் இரவு கவர்னர் மாளிகையில் இருந்து அமைச்சரவை மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து புதிய அமைச்சர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் இருக்கைகள் போடப்பட்டு அனைத்தும் தயார்நிலையில் வைக்கப்பட்டன.

இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு புதிய அமைச்சர் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகைக்கு 10.23 மணிக்கு வருகை தந்தார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

சரியாக 10.29 மணிக்கு தர்பார் மாளிகைக்கு கவர்னர் வந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் தேசியகீதம் இசைக்கப்பட்டது. பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

மேடையில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் இறையன்பு இருந்தனர். 10.31 மணிக்கு டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி கவர்னரை தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து டி.ஆர்.பி. ராஜா எழுந்து பதவியேற்க தயாரானார். 10.34 மணிக்கு அவருக்கு கவர்னர் ஆர்.என். ரவி அமைச்சராக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது:-

டி.ஆர்.பி.ராஜா எனும் நான் சட்டப்படி அமைக்கப் பெற்ற இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும் தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக உண்மையாகவும் உளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியலமைப்பிற்கும், சட்டத்துக்கும் இணங்க அச்சமும் ஒருதலை சார்பும் இன்றி விருப்பு வெறுப்பை விலக்கி பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு டி.ஆர்.பி.ராஜா கூறி பதவியேற்றுக்கொண்டார். அதற்கான ஆவணத்திலும் அவர் கையெழுத்திட்டார்.

இதையடுத்து அவர் கவர்னரிடமும், முதலமைச்சரிடமும் வாழ்த்து பெற்றார். அவர்களுக்கு டி.ஆர்.பி.ராஜா பூங்கொத்துகளை வழங்கி வணக்கம் தெரிவித்தார்.

பதிலுக்கு கவர்னரும், முதலமைச்சரும் புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார்கள். அதன்பிறகு கவர்னர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிரித்தபடி பூங்கொத்து வழங்கி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

10.38 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுபெற்றது. இறுதியில் தேசியகீதம் பாடப்பட்டது. 8 நிமிடங்களில் பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவுபெற்றது. அதன்பிறகு முதலமைச்சரும், அமைச்சர்களும் கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

நிகழ்ச்சியில் அனைத்து அமைச்சர்கள், சபாநாயகர் அப்பாவு, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு எம்.பி., மேயர் பிரியா, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உதயசந்திரன், கார்த்திகேயன், கிருஷ்ணன், டி.ஜி.பி.சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றனர். புதிய அமைச்சராக பதவி ஏற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News