குலசேகரத்தில் சுற்றுலா வேன் மோதி பஞ்சாயத்து டிரைவர் மரணம்
- மாஞ்சக்கோணம் பகுதியில் சுற்றுலா வேன் வந்த போது எதிர்பாராதவிதமாக அஸ்வின் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அஸ்வினை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருவட்டார்:
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மகன் அஸ்வின் (வயது 33).
இவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் வாகன டிரைவராக உள்ளார். அஸ்வினுக்கு இன்னும் திருமணமாகவில்லை. நேற்று இவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார்.
குலசேகரம்-களியல் சாலையில் அஸ்வின் சென்ற போது, எதிரே திற்பரப்பு நோக்கி சுற்றுலா வேன் வந்துள்ளது. இந்த வேன், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வந்தது.
மாஞ்சக்கோணம் பகுதியில் சுற்றுலா வேன் வந்த போது எதிர்பாராதவிதமாக அஸ்வின் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அஸ்வின் தூக்கி வீசப்பட்டார்.
அவர் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அஸ்வினை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அஸ்வின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து வேன் டிரைவர் திருச்செந்தூரைச் சேர்ந்த மகேஷ் கைது செய்யப்பட்டார்.