காருடன் கடத்தப்பட்ட வாலிபரை 5 மணி நேரத்தில் மீட்ட வெள்ளவேடு போலீசார்
- அனிதா தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
- ராணிப்பேட்டை பகுதியில் காருடன் கடத்தி செல்லப்பட்ட வாலிபரை 5 மணி நேரத்தில் மீட்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த ஸ்ரீதேவிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ்தாஸ் (28). இவரது மனைவி அனிதா (23). இருவரும் நேற்று முன்தினம் காரில் சென்னையில் உள்ள அனிதாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்றனர்.
நேற்று காலை இருவரும் காரில் ஸ்ரீதேவிக்குப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே வந்த போது பின்னால் கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து உமேஷ்யாதவ் காரில் இருந்து கீழே இறங்கியபோது மர்ம நபர்கள் அவரது மனைவி அனிதாவை கீழே இறக்கிவிட்டு உமேசை காருடன் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து அனிதா தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் பூந்தமல்லி உதவி ஆணையர் ஜவகர், ஆய்வாளர் இளையராஜா மற்றும் போலீசார் அனிதாவிடம் கடத்தல் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உமேஷ் சகோதரர் ராஜேஷ் என்பவர் நிதி நிறுவனங்களில் கூடுதல் பணம் பெற்றுத் தருவதாக பலரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பணத்தை ராஜேஷிடம் கொடுத்தவர்கள் உமேஷ் தான் ராஜேஷ் என்று நினைத்து அவரை கடத்தி சென்றதாக தெரிய வருகிறது. இதையடுத்து வெள்ளவேடு தனிப்படை போலீசார் வேலுார் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியில் காருடன் கடத்தி செல்லப்பட்ட வாலிபரை 5 மணி நேரத்தில் மீட்டனர்.
இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை காருடன் கடத்தி சென்ற காஞ்சிபுரம் மாவட்டம் உழக்கோல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பவளரசன் (36), ராணிப்பேட்டை மாவட்டம் கல்குளம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் (34) காஞ்சிபுரம் தாமல் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (24), திருவண்ணா மலை மாவட்டம் நெசல்புதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த கோபி (34) ஆகிய 4 பேரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.