உள்ளூர் செய்திகள்

மஞ்சூர்-கோவை சாலையில் வனத்துறையினரை விரட்டிய காட்டு யானை

Published On 2024-02-21 10:17 GMT   |   Update On 2024-02-21 10:17 GMT
  • ஒரு காட்டு யானை மட்டும் திடீரென வனத்துறையினர் சென்ற வாகனத்தை நோக்கி ஆவேசமாக பிளிறியபடி வந்தது.
  • கோவை-மஞ்சூர் சாலையில் இருமார்க்கங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்:

கோவையில் இருந்து நேற்று நீலகிரி மாவட்டம் மஞ்சூர் நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அப்போது கோவை- மஞ்சூர் சாலை கெத்தை பகுதியில் 2 குட்டிகளுடன் வந்திருந்த 3 காட்டுயானைகள் அரசு பஸ்சை வழிமறித்தன. இதனால் அந்த பஸ்சில் பயணித்தவர்கள் அச்சத்தில் அலறினர். மேலும் கோவை-மஞ்சூர் சாலையில் இருமார்க்கங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவலின்பேரில் குந்தா வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கையடக்க சைரன் மூலம் பெரியஅளவில் ஒலி எழுப்பி, நடுரோட்டில் முகாமிட்டு நின்ற காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சாலையில் முகாமிட்டு நின்ற யானைகள், அடர்ந்த காட்டுக்கு திரும்ப தொடங்கின.

இதற்கிடையே ஒரு காட்டு யானை மட்டும் திடீரென வனத்துறையினர் சென்ற வாகனத்தை நோக்கி ஆவேசமாக பிளிறியபடி வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக தங்களின் வாகனங்களை பின்னோக்கி இயக்கினர்.

மேலும் தொடர்ந்து சைரன் ஒலியை எழுப்பி வந்ததால், ஊழியர்களை விரட்டி வந்த காட்டு யானை பின்னர் ஒருவழியாக அடர்ந்த காட்டுக்குள் திரும்பி சென்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News