பெண்ணை காரில் அழைத்து சென்று தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர்: 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
- சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வனுக்கும், பணகுடி பகுதியில் வசிக்கும் ஒரு 44 வயது பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளாக பழக்கம் இருந்து வருகிறது.
- சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வன் மீது ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளது.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி கோரி காலனியை சேர்ந்தவர் சித்திரை செல்வன்(வயது 36). இவர் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் மீது பணகுடி போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு பெண் புகார் அளித்தார். அதில் சித்திரை செல்வன் தனக்கு பணம் தராமல் ஏமாற்றியதோடு தன்னை தாக்கியதாக தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர் புகார் மனு அளித்துவிட்டு வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-
சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வனுக்கும், பணகுடி பகுதியில் வசிக்கும் ஒரு 44 வயது பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளாக பழக்கம் இருந்து வருகிறது. இதனால் அந்த பெண் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் சித்திரை செல்வன் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாகவும், அவருக்கு ஆடம்பர செலவுக்காக பணம் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டதால், அந்த பெண் மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சித்திரை செல்வன் தன்னை ஏமாற்றி பணம் பறித்து விட்டதாகவும், அதனை திருப்பி தருமாறும் அந்த பெண் அவரிடம் அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சித்திரை செல்வன், நேற்று அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி காரில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணை காட்டுப்பகுதியில் வைத்து தாக்கி, பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என அவதூறாக பேசி மீண்டும் பணகுடியில் இறக்கி விட்டுள்ளார்.
இதில் காயம் அடைந்த அந்த பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பணகுடி போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் 294(பி), 323 ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வன் மீது ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளது. திருச்சியில் விபத்தில் இறந்த அவர்களது பேட்ஜ் போலீஸ்காரர் ஒருவரின் குடும்பத்திற்கு வழங்குவதற்காக நண்பர்களிடம் பிரித்த ரூ.28 லட்சம் பணத்தை அவர் வழங்காமல் மோசடி செய்ததாக புகார் வந்தது. அதன்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.