இரவில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு
- ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி 3-ல் நேற்றிரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மகள் வீட்டுக்கு தனியாக நடந்து சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
- அப்போது அவர் பின்னால் மோட்டார் சைக்கிளில் இரு வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் சமீபகாலமாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இருந்தாலும் இதனையும் மீறி ஒரு சில இடங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 பெண்களிடம் 7 பவுன் செயினை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர். இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு மீண்டும் ரோட்டில் தனியாக நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் செயினை பறித்து உள்ள சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி 3-ல் நேற்றிரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மகள் வீட்டுக்கு தனியாக நடந்து சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் மோட்டார் சைக்கிளில் இரு வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் திடீரென அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் திருடன். திருடன்.. என கத்தினார். சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் வருவதற்குள் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநகர் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவதால் பெண்கள் பீதி அடைந்து உள்ளனர்.