நெல்லையில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டம் நீடிப்பு
- மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திய போது சந்தியா மறுத்ததால் வாலிபர் அவரை கொலை செய்தது தெரியவந்தது.
- தொடர்ந்து தாசில்தார் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள திருப்பணி கரிசல்குளம் மணிமேடை தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் சந்தியா(வயது 18). இவர் நெல்லை டவுன் ரதவீதியில் நெல்லையப்பர் கோவில் அருகே உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் சந்தியா வேலைக்கு சென்றபோது அந்த கடையின் அருகே உள்ள கடையில் வேலை பார்த்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ள தோப்பூரை சேர்ந்த 17 வயது வாலிபர் அவரை கத்தியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார்.
இதுதொடர்பாக டவுன் போலீசார் அந்த வாலிபரை கைது செய்து நடத்திய விசாரணையில், அந்த வாலிபரும், சந்தியாவும் காதலித்து வந்ததும், 2 மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டதும் தெரியவந்தது. தற்போது மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திய போது சந்தியா மறுத்ததால் அந்த வாலிபர் அவரை கொலை செய்தது தெரியவந்தது.
இதற்கிடையே சந்தியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.1 கோடி இழப்பீடு, இடம் உள்ளிட்டவை கேட்டு அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நேற்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊர்வலமாக சென்று பேட்டை ரெயில்வே தண்டவாளம் அருகே மெயின்ரோட்டில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் செய்தனர். இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.
தொடர்ந்து தாசில்தார் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஆதி திராவிட நலத்துறை துணை கலெக்டர் பெனட் ஆசீர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசு வேலை வழங்குவதற்கு அரசிற்கு பரிந்துரை செய்யப்படும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதற்கட்ட நிதியை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனாலும் இன்று 3-வது நாளாக திருப்பணி கரிசல்குளம் கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த சந்தியாவின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும், வாலிபர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.