குடும்பத்துக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை: வேலை கிடைக்காததால் இளம்பெண் தற்கொலை
- தற்கொலை செய்து கொண்ட ஸ்வேதா பள்ளி அளவில் 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்தவர் ஆவார்.
- போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருநின்றவூர்:
திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் முருகன். இவரது மூத்த மகள் ஸ்வேதா (வயது 21).
இவர் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் பட்டபடிப்பை கடந்த ஆண்டு முடித்தார். இதன் பின்னர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைக்காக நேர்முக தேர்வு வரை சென்றும் எதிலும் வேலை கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்வேதா அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் நேர்முக தேர்வுக்கு சென்றார். இதிலும் அவர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படாமல் வீடு திரும்பியதாக தெரிகிறது. இந்த நிலையில் ஸ்வேதா வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து பெற்றோர் அறைக்கு வந்து பார்த்த போது மகள் ஸ்வேதா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் நடத்திய சோதனையின் போது ஸ்வேதா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் நான் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. அம்மாவை நன்றாக பார்த்து கொள்ளவும். தங்கையை நன்றாக பார்த்து கொள்ளவும். அம்மாவை வேலைக்கு அனுப்ப வேண்டாம். பூனையை பத்திரமாக பார்த்து கொள்ளவும் என்று எழுதி உள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட ஸ்வேதா பள்ளி அளவில் 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்தவர் ஆவார்.
கல்லூரி படிப்பு முடித்து அவருக்கு வேலை கிடைக்காத நிலையில் அவரது தங்கை நல்ல நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்ததாக தெரிகிறது. இதனால் வீட்டிற்கு மூத்தவளாக இருந்தும் வேலை கிடைக்காததால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற மன வேதனையில் அவர் தற்கொலை செய்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.