மணல் கடத்தலில் கைது- டிரான்ஸ்பார்மர் மீது ஏறி போலீசாரை மிரட்டிய வாலிபர்
- மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஜோதியை சிறப்பு படை போலீசார், வாணியம்பாடி தாலுகா போலீசிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.
- போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் பகுதியில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொள்ளை நடக்கிறது.
இதனை தடுக்க சிறப்பு படை போலீசார், இன்று காலை அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவரை, மடக்கி பிடித்தனர்.
மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஜோதியை சிறப்பு படை போலீசார், வாணியம்பாடி தாலுகா போலீசிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி வாணியம்பாடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சிறப்பு படை போலீசார் பேசிக் கொண்டிருந்ததை, ஓட்டு கேட்ட ஜோதி அங்கிருந்து வேகமாக ஓடினார். கிராமத்தை ஒட்டியுள்ள டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து அதன் மீது ஏறி உட்கார்ந்து கொண்டார்.
நீங்கள் என்னை கைது செய்தால், நான் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என போலீசாரை மிரட்டி ரகளையில் ஈடுபட்டார்.
அவரிடம் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.