பிளஸ்-2 மாணவியை பெண் கேட்டு சென்றபோது தாக்கியதால் வாலிபர் தற்கொலை
- சாம்ராஜை தாக்கிய மாணவியின் தந்தையை கைது செய்ய கோரி அவரது உறவினர்கள் களம்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆரணி திருவண்ணாமலை ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. கூலி தொழிலாளி. இவருடைய 2-வது மகன் சாம்ராஜ் (வயது 21) சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவர் அதே பகுதியில் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.
இதற்கு மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாணவி சாம்ராஜூடன் பேசுவதை நிறுத்தினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சாம்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் முகேஷ், சந்தோஷ் ஆகியோர் மாணவியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் மாணவியின் தந்தை சாம்ராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சாம்ராஜ் அவரது உறவினர் ஒருவரிடம் செல்போனில் விவரங்களை தெரிவித்துள்ளார்.
பின்னர் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்ட சாம்ராஜின் தாய் செல்வராணி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்றனர். தூக்கில் தொங்கிய சாம்ராஜை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சாம்ராஜை தாக்கிய மாணவியின் தந்தையை கைது செய்ய கோரி அவரது உறவினர்கள் களம்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆரணி திருவண்ணாமலை ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். களம்பூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வாலிபரை தாக்கியதாக கூறப்படும் மாணவியின் தந்தை தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.