கல்பாக்கம் அருகே செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
- மனவேதனையில் செல்வம் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
- போலீசார் செல்வத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மது போதையில் இருப்பது தெரிந்தது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியில் செல்போன் கோபுரம் உள்ளது. இன்று காலை அவ்வழியே வந்த வாலிபர் ஒருவர் திடீரென செல்போன் கோபுரத்தில் ஏறினார். அவர் விறுவிறுவென செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்றார்.
அங்கிருந்து அவர் கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறி கூச்சலிட்டார். இதனை கண்டு அவ்வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த வாலிபரை கிழே இறங்கும் படி அறிவுறுத்தினர். ஆனால் அந்த வாலிபர் கிழே இறங்க மறுத்தார். இதையடுத்து அங்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
அவரை மீட்பதற்காக போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் முயன்று செல்போன் கோபுரத்தில் ஏறினால் அவர் கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் திகைத்தனர். சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக அவர் கீழே இறங்காமல் போக்குகாட்டி அடம்பிடித்தார்.
இதற்கிடையே அந்த வாலிபரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி விசாரித்தபோது தற்கொலை மிரட்டல் விடுத்தது அதே பகுதியை சேர்ந்த செல்வம்(30) என்பது தெரியவந்தது.
இதுபற்றி அறிந்ததும் செல்வத்தின் மாமியார் அங்கு வந்தார். இதனை அறிந்த செல்வம் எதுவும் பேசாமல் ஏறிய அதே வேகத்தில் விறு, விறுவென கீழே இறங்கி வந்தார்.
இதையடுத்து போலீசார் செல்வத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மது போதையில் இருப்பது தெரிந்தது. குடும்ப தகராறில் அவரது மனைவி பிரிந்து மாமியார் வீட்டுக்கு சென்று இருப்பது தெரிந்தது.
இதனால் மனவேதனையில் செல்வம் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. பின்னர் அவருக்கு போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர். இதனால் அப்பகுதி இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.