பொடியனூர் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் தினம்-கிருஷ்ண ஜெயந்தி விழா
- குழந்தைகள் கிருஷ்ணர்- ராதை வேடம் அணிந்து நடனமாடினர்.
- விளையாட்டுப் போட்டிகளில் சிவசக்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் பெற்றனர்.
தென்காசி:
பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானுார் அருகே உள்ள பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தினவிழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வர் நித்யா தினகரன் தலைமை தாங்கினார். மாணவி சுதர்சினி வரவேற்று பேசினார். மாணவி வைஷ்ணவி ஆசிரியர் தின விழா கொண்டாடுவதன் நோக்கத்தை எடுத்து கூறினார். 10-ம் வகுப்பு மாணவிகள் பள்ளி ஆசிரியைகள் எவ்வாறு சிறந்த மாணவர்களை உருவாக்குகிறார்கள் என்பதை நாடகம் மூலம் எடுத்து கூறினர்.
தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகள் கிருஷ்ணர்- ராதை வேடம் அணிந்து நடனமாடினர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னதாக திசையன்விளை வி.எஸ்.ஆர். கல்விக்குழுமம் நடத்திய 4 மாவட்டங்களுக்கு இடையேயான கபாடி போட்டியில் பள்ளி மாணவர்கள் 0-14 மற்றும் யு-19 பிரிவில் விளையாடி வெற்றி கோப்பையை கைப்பற்றினர். மேலும் கோவில்பட்டியில் வித்யாபாரதி நடத்திய பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் சிவசக்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் பெற்றனர்.
சுரண்டை எஸ்.ஆர். பள்ளியில் நடைபெற்ற பல்வேறு கலை-விளையாட்டு போட்டிகளிலும் மாணவர்கள் திறம்பட பங்கேற்று வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விழாவின்போது பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களால் ஆசிரியைகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டி களில் ஆசிரியைகள் உற்சாக மாக கலந்து கொண்டனர்.
முடிவில் மாணவி ஆஸ்மி நன்றி கூறினார்.