- மன்றத்தின் நடவடிக்கைகளை பார்வையிட அனுமதி கேட்டோம். ஆனால் பொதுமக்களை அனுமதிக்கவில்லை
- கூட்டம் முடிந்ததும் சந்திப்பதாகவும் அதுவரை வெளியில் காத்து இருக்கும் படியும் பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது.
உடுமலை :
உடுமலை அருகே உள்ள தளி ஊராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் வெ. உதயகுமார் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் கல்பனா மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் திருமூர்த்தி மலை அருகே உள்ள இலங்கைத்தமிழர்கள் முகாமிற்கு ரூ. 4 லட்சம் செலவில் 10.000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைப்பது உட்பட மே மாதத்திற்கான தொழில், சொத்து ,குடிநீர் வரி வசூல் விவரங்கள் உட்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் போது தளி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மன்றக் கூட்டத்தை பார்வையாளர் பகுதியில் இருந்து காண வந்தனர். இதற்கு மன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர் அதனால் அவர்கள் கூட்ட அரங்கிற்கு வெளியே அமர்ந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, மன்றத்தின் நடவடிக்கைகளை பார்வையிட அனுமதி கேட்டோம். ஆனால் எங்களை அனுமதிக்கவில்லை இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து செயல் அலுவலர் கல்பனாவிடம் கேட்டபோது, மன்ற கூட்டம் நடைபெறும் போது பொதுமக்கள் வந்து பார்வையாளர் பகுதியில் அமர முற்பட்டனர். அப்போது சில கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக வந்ததாக தெரிவித்தனர். எனவே கூட்டம் முடிந்ததும் சந்திப்பதாகவும் அதுவரை வெளியில் காத்து இருக்கும் படியும் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. அதன்படி கூட்டம் முடிந்ததும் அவர்களை அழைத்து கோரிக்கை விபரம் கேட்கப்பட்டது என்றார்.