ஒற்றைக்காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு- மருத்துவ குழுவினர் வரவழைப்பு
- 35 வயது மதிக்கத்தக்க ஒற்றை காட்டு யானையை பிடிக்க மருத்துவ குழு வரவழைக்கப்பட்டுள்ளது.
- வனத்துறையினருடன் இணைந்து கடம்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைகிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை கடந்த ஒரு வருடமாக உணவுக்காக பூதிக்காடு, செங்காடு உள்ளிட்ட வனத்தை யொட்டிய விவசாயம் நிலங்களில் புகுந்து சோளம், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கடம்பூர் வனத்துறையில் இது குறித்து புகார் அளித்து இருந்தனர்.
மேலும் பயிர்களை நாசம் செய்து வரும் இந்த ஒற்றை காட்டு யானை பிடித்து வேறொரு பகுதியில் விட வேண்டும் எனவும் வனத்துறைக்கு விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கையும் விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடம்பூர் வனத்துறையினர் உயரதிகாரிகளின் அனுமதியை தற்போது பெற்றுள்ள நிலையில் 35 வயது மதிக்கத்தக்க அந்த ஒற்றை காட்டு யானையை பிடிக்க மருத்துவ குழு வரவழைக்கப்பட்டுள்ளது.
அதே போன்று காட்டு யானை பிடித்து மற்றொரு வனப்பகுதியில் கொண்டு செல்ல விடுவதற்கு வனத்துறை சார்பில் ஒசூர் பகுதியில் இருந்து லாரியும் வரவழைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மருத்துவ குழு மற்றும் கடம்பூர் வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் இணைந்து அந்த ஒற்றை யானை செல்லும் வழி தடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த ஒற்றை காட்டு யானையானது சமதளமான விவசாய நிலங்களையொட்டி வரும் போது தான் மருத்துவ குழுவால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழு இணைந்து ஒற்றை காட்டு யானையை கண்காணித்து வரும் நிலையில் மயக்க ஊசி செலுத்தி இந்த காட்டு யானை வேறு எந்த வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வை பார்க்க மலைகிராம மக்கள் ஆங்காங்கே வேடிக்கை பார்த்து வருவதால் காட்டு யானையால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் வனத்துறையினருடன் இணைந்து கடம்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.