நாங்குநேரியில் ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- மறுகால்குறிச்சி செல்லும் சாலையில் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியை சுற்றிலும் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன
- ஊருக்குள் புகுந்துள்ள கரடி, அங்குள்ள பெரியகுளம் பகுதியில் தான் வலம் வருகிறது. அவ்வப்போது விளைநிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதம் செய்கிறது
நெல்லை:
தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. வுமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊருக்குள் புகுந்த கரடி
நாங்குநேரியில், மறுகால்குறிச்சி செல்லும் சாலையில் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியை சுற்றிலும் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இவற்றில் வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த நேற்று முன்தினம் இங்குள்ள விளை நிலங்களுக்குள் கரடி ஒன்று புகுந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த இந்த கரடி, திசை மாறியதால், ஊருக்குள் புகுந்துள்ளது தெரியவந்தது.
ஊருக்குள் புகுந்த கரடி, விவசாயிகளை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அச்சமடைந்த விவசாயிகள், தங்களது விளை நிலங்களை விட்டு உடனடியாக வெளியேறினார்கள். இதற்கிடையில் மறுகால்குறிச்சி சாலையில் அமைந்துள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்ய வந்த தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், இந்த கரடியை நேரில் பார்த்தார்.
எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
இதற்கிடையே ஊருக்குள் புகுந்துள்ள கரடி, அங்குள்ள பெரியகுளம் பகுதியில் தான் வலம் வருகிறது. அவ்வப்போது விளைநிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதம் செய்கிறது. இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர், ஊருக்குள் புகுந்த கரடியை உயிருடன் பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைத்துள்ளார்கள். கூண்டுக்குள், கரடிக்கு பிடித்த பழவகைகளை வைத்திருக்கிறார்கள்.
நேற்று 2-வது நாளாகியும், அந்த கூண்டுக்குள் கரடி சிக்கவில்லை. ஊருக்குள் புகுந்துள்ள அந்த கரடியால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்துல் ஏற்பட்டு இருப்பதால், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, அந்தக் கரடியை உயிருடன் பிடித்து, காட்டுக்குள் விட வேண்டும் என்று, தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் கரடி நடமாட்டம் உள்ள மறுகால்குறிச்சி செல்லும் சாலையில் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இருப்பதால், மாணவிகளின் நலன்கருதி, கரடியை பிடிக்கும் நடவடிக்கையை வனத்துறை யினர் வேகப்படுத்த வேண்டும். எனவும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.