தாய்-மகன்-பேரன் கொலைக்கு பெண் தகராறு காரணமா? ஐதராபாத்தில் தனிப்படை தீவிர விசாரணை
- கொலை நடந்த வீட்டில் இருந்து 3 செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
- கொலையாளிகள் நிச்சயமாக 3 பேருக்கு மேல் இருந்திருப்பார்கள் என்று போலீசார் கருதுகிறார்கள்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள காராமணிக்குப்பம் ராஜாராம் நகரில் ஒரே குடும்பத்தில் தாய்-மகன்-பேரன் என 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் ராஜாராம் நகரை சேர்ந்த கமலேஸ்வரி என்ற 60 வயது பெண், தனது மகன் சுகுந்தகுமார், பேரனுடன் வசித்து வந்த நிலையில்தான் மர்ம நபர்கள் அவர்களை மிகவும் கொடூரமாக வெட்டிக் கொன்று உடல்களை எரித்துள்ளனர்.
கமலேஸ்வரியின் கணவர் சுரேஷ்குமார் இறந்து விட்ட நிலையில், சுகந்தகுமாரின் மனைவி விவாகரத்தாகி பிரிந்து சென்று விட்டார். இதனால் மகன் நிஷாந்தை தாய் வீட்டில் விட்டு விட்டு சுகந்தகுமார் ஐதராபாத்தில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே கடலூருக்கு வந்து சென்றுள்ளார்.
இதுபோன்ற ஒரு சூழலில்தான் 3 பேரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கடலூரையே கலங்கடித்துள்ளது.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொலை சம்பவம் தொடர்பாக எந்தவித துப்பும் துலங்காமலேயே உள்ளது.
கொலையாளிகள் யார்? எதற்காக 3 பேரையும் கொன்றார்கள்? என்பது தெரியவில்லை. இதனை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சுகுந்தகுமார் ஐதராபாத்தில் பெண் ஒருவருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண்ணுடன் சுகந்தகுமாருக்கு தகராறு ஏற்பட்டு அது தொடர்பான முன்விரோதத்தில் சுகுந்த குமாரை கொலை செய்யவந்தவர்கள் தாய்-மகனையும் கொன்றார்களா? என்கிற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் குடும்ப தகராறு காரணமாக கொலை நடந்ததா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலையாளிகள் கடந்த 12-ந்தேதி அன்று 3 பேரையும் கொலை செய்து விட்டு பின்னர் நேற்று அதிகாலையில் வந்து தடயங்களை அழிப்பதற்காக 3 பேரின் உடல்களுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்பிறகே கொலை சம்பவம் வெளியில் தெரியவந்தது.
கொலையாளிகளை பிடிப்பதற்காக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர். ஆனால் அதில் பதிவாகி இருந்த காட்சிகள் பெரிதாக கை கொடுக்கவில்லை.
கொலை நடந்த வீட்டில் இருந்து 3 செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கொலை செய்யப்பட்ட கமலேஸ்வரி, சுகுந்தகுமார் ஆகியோர் பயன்படுத்திய இந்த செல்போன்களை வைத்தும் துப்பு துலக்கப்பட்டு வருகிறது.
கொலையாளிகள் நிச்சயமாக 3 பேருக்கு மேல் இருந்திருப்பார்கள் என்று போலீசார் கருதுகிறார்கள்.
சுகுந்தகுமாரின் தலைமுடி வாசல் கதவுக்கு வெளியில் சிதறி கிடந்துள்ளது. இதனால் முதலில் வீட்டுக்கு வெளியில் வைத்து கொலையாளிகள் அவரை வெட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உயிருக்கு பயந்து அவர் வீட்டுக்குள் ஓடியதும் தாய், மகன் ஓடி வந்திருக்கலாம் என்றும் அப்போது கதவை பூட்டிக் கொண்டு 3 பேரையும் கொலையாளிகள் துடிக்க துடிக்க கொன்றிருக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுகுந்தகுமாரின் செல்போனில் பதிவாகி உள்ள எண்கள் மற்றும் அவர் யார்-யாருடன் அதிகமாக பேசியுள்ளார் என்பது பற்றி விசாரணை நடத்தி வரும் போலீசார் அதன் மூலமாக கொலை வழக்கில் துப்பு ஏதும் கிடைக்குமா? என்று விசாரித்து வருகிறார்கள்.