பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் பணி தொடங்கியது
- ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன்களை விநியோகித்தனர்.
- நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு சுழற்சி முறையில் வழங்கப்படும்
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2023-ம் ஆண்டு தைப் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்காக, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் ரூ.1000 (ரூபாய் ஆயிரம்) ரொக்கப்பணம் வழங்க தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பண விநியோகப் பணியினை 9.1.2023- ந் தேதி அன்று தமிழக முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட உள்ளது. அன்றைய தினமே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் நடைமுறையிலுள்ள 7.96 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 310 குடும்பங்களுக்கும், விடுதலின்றி சுழற்சி முறையில் பொங்கல் பரிசு வழங்கப்படும்.
நியாய விலைக் கடைகளில் நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அந்தந்த நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு சுழற்சி முறையில் வழங்கப்படும் விபரம், கிராமம் ,தெருவின் பெயர் மற்றும் நாள் ஆகிய விபரங்கள் குறித்த டோக்கன்கள் 3.1.2023 முதல் 8.1.2023 வரை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளின் விற்பனையாளர் மூலம் வழங்கப்படும்.
அவ்விவரங்கள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடையில் அறிவிப்பு பலகை மூலம் அறிவிப்பாக தெரிவிக்கப்படும். பொங்கல் பரிசு நியாய விலைக்கடை விற்பனை முனைய எந்திரத்தின் (POS) பயோமெட்ரிக் முறை மூலம் வழங்கப்படும். அதன்படி, குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வேண்டுமானாலும், தங்களுக்குரிய நாட்களில் பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசு வழங்கப்பட்ட விவரம் குடும்ப அட்டைதாரர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
அனைத்து நியாய விலைக்கடைகளிலும், குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ளலாம் எனவும், பொங்கல் பரிசுப் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் : 1967 மற்றும் 1800 425 5901, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்: 0421-2971116, மாவட்டவழங்கள் அலுவலர் : 94450 00407, 73387 20335,துணைப்பதிவாளர், (பொதுவிநியோகத்திட்டம்) :தனிவட்டாட்சியர், திருப்பூர் வடக்கு : 94450 00257, தனிவட்டாட்சியர், உடுமலைப்பேட்டை : 94450 00254, வட்டவழங்கல் அலுவலர், அவினாசி : 94450 00255, 00255, வட்டவழங்கல் அலுவலர், பல்லடம் : 94450 00256, வட்டவழங்கல் அலுவலர், திருப்பூர் தெற்கு : 94457 96462, வட்டவழங்கல் அலுவலர், மடத்துக்குளம் : 9445796409, வட்டவழங்கல் அலுவலர், தாராபுரம் : 94450 00244, வட்டவழங்கல் அலுவலர், காங்கயம் : 94450 00243, வட்டவழங்கல் அலுவலர், ஊத்துக்குளி : 94457 96463 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் பணி இன்று தொடங்கியது. ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன்களை விநியோகித்தனர்.