உள்ளூர் செய்திகள் (District)

மலை கிராமங்களில் போலீசார் விடிய விடிய சாராய வேட்டை

Published On 2024-06-22 05:38 GMT   |   Update On 2024-06-22 05:38 GMT
  • 70 கிராமங்களிலும் சட்டத்துக்கு புறம்பாக கள்ளசாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா? என்று சோதனை நடத்தப்பட்டது.
  • ஏற்காடு மலை கிராமங்களில் சாராய சோதனை தொடரும்.

ஏற்காடு:

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் படி சேலம் மாவட்டத்திலும் போலீசார் பல்வேறு இடங்களில் சாராயம் விற்க்கப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் ஏற்காடு மலை பகுதிகளில் உள்ள கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

ஏற்காடு வனப்பகுதிகளில் உள்ள 70 கிராமங்களிலும் சட்டத்துக்கு புறம்பாக கள்ளசாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா? என்று சோதனை நடத்தப்பட்டது.

ஏற்காடு போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் தனித்தனி குழுவாக பிரிந்து ஒவ்வொரு கிராமங்களிலும் சந்தேகப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் பழைய சாராய வியாபாரிகளின் வீடுகளில் தீவிர சோதனை நடத்தினர்.

மேலும் ஆத்துஓடைகள், வனப்பகுதிகளிலும் சாராயம் காய்ச்சப்படுகிறதா? என்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். விடிய, விடிய போலீசார் மலை கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீசார் கூறும் போது, சட்டத்துக்கு புறம்பாக யாராவது சாராயம் காய்ச்சி விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மலை கிராமங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை ஊர்தலைவர்கள் கண்டறிந்து ஏற்காடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

இது குறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் கூறும் போது. ஏற்காடு மலை கிராமங்களில் சாராய சோதனை தொடரும். சட்டத்துக்கு புறம்பாக யாராவது மது மற்றும் சாராயம் காய்ச்சினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளார்.

Tags:    

Similar News