ஆழ்வார்குறிச்சி பகுதியில் மகளிர் குழு பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்
- கடந்த 2012 முதல் 2018 வரை மாதம் ரூ. 100, ரூ. 200 என்ற வீதம் மகளிர் குழுவில் சேமிப்பு செய்து வந்தனர்.
- குழு தலைவி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் 19 பெண்கள் இணைந்து ஸ்டார் மகளிர் குழுவில் கடந்த 2012 முதல் 2018 வரை மாதம் ரூ. 100, ரூ. 200 என்ற வீதம் சிறுக சிறுக சேமித்து வந்த நிலையில் அக்குழுவின் தலைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2018 முதல் சேமிப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மேற்படி குழு தலைவி மீதமுள்ள பணத்தை தங்களுக்கு தராமல் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி அறிவுறுத்தலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி விசாரணை செய்து மகளிர் குழுவின் சேமிப்பு பணம் ரூ. 2 லட்சத்து 56 ஆயிரத்தை மீட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பணத்தை மீட்டுக் கொடுத்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு பணத்தைப் பெற்ற பெண்கள் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.