கல்லிடைக்குறிச்சி அருகே கோவிலுக்குள் புகுந்த கரடி
- இரவு நேரங்களில் கரடியின் நடமாட்டம் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- அப்பகுதியினர் மிகுந்த அச்சம் அடைந்துள்ள நிலையில், அந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே நெசவாளர் காலனியில், வயல் வெளியில் அமைந்துள்ள அக்னி சாஸ்தா கோவில் பகுதியில் நேற்றிரவு கரடி ஓன்று புகுந்தது. தொடர்ந்து அங்கும் இங்குமாக உலா வந்து பூஜை பொருட்களை சேதப்படுத்தியது. இந்த சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது.
மேலும் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள தெற்கு பாப்பான்குளம், கோல்டன் நகர், நெசவாளர் காலனி, கோல்டன் நகர் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் கரடியின் நடமாட்டம் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொடர்ச்சியாக மலை அடிவார கிராம பகுதிகளில் கரடியின் நடமாட்டம் இருப்பதால் அதை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்குமாறு வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடையம் மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறுத்தை, யானை, கரடி, உள்பட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ள நிலையில், இவற்றில் யானை மற்றும் கரடி இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன.
இந்நிலையில் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பூவன்குறிச்சி என்ற கிராமத்தில் நேற்று இரவு ஒற்றைக் கரடியானது சுற்றி திரிந்தது. இதனை அப்பகுதியினர் செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இதனால் அப்பகுதியினர் மிகுந்த அச்சம் அடைந்துள்ள நிலையில், அந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.