உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த சாலை தடுப்பு சுவரை படத்தில் காணலாம்.

பூமி பூஜை போட்டு கிடப்பில் போடப்பட்டசாலை பணிகள்

Published On 2023-05-06 09:27 GMT   |   Update On 2023-05-06 09:27 GMT
  • பணிகளை தொடங்குவதற்கு பூமி பூஜை போட்டு ஒன்றரை மாதங்கள் கடந்த பின்னும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
  • சில தினங்களாக மழை பெய்து வருவதினால் சேரும் சகதியுமாக மாறுவதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தொப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொப்பையாறு அணை வழியாக பொம்மிடி வரை செல்லும் தார்சாலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு சாலையின் இருபுறமும் பிளவு ஏற்பட்டு போக்குவரத்துப் பாதை தடைப்பட்ட நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இச்சாலையை தினமும் 1000- க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்லுகின்ற முக்கிய சாலையாக உள்ளது.

தொப்பையாறு அணை நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டிய நிலையில் இருந்ததால் இச்சாலையை சீரமைக்க முடியாத நிலையில் இருந்தன. அதனை தொடர்ந்து அணையின் நீர்மட்டம் குறைந்ததால் பழுதான தடுப்பு சுவர் பகுதியின் அருகே தற்காலிக புதிய மாற்று பாதை ஏற்படுத்தப்பட்டு, பழுதான சாலையில் பெரிய அளவிலான புதிய தடுப்பு சுவர் அமைத்து சாலையை சீரமைக்க, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ. 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிக்கான பூமிபூஜை, அடிக்கல் நாட்டும் விழா மார்ச் மாதம் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில் பணிகளை தொடங்குவதற்கு பூமி பூஜை போட்டு ஒன்றரை மாதங்கள் கடந்த பின்னும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் ஏமாற்றத்துக்குள்ளாகி உள்ளனர். மேலும் தற்காலிக மண்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் தற்போது அதில் பயணம் செய்து வருகின்றனர். சில தினங்களாக மழை பெய்து வருவதினால் சேரும் சகதியுமாக மாறுவதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாலப்பணிகளை தொடங்கி உடனடியாக முடித்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News