சங்கரன்கோவில் பகுதியில் விவசாய நிலங்களை கோவில் இடம் என அறிவித்ததால் பரபரப்பு
- 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலங்களில் குடியிருந்து அனுபவித்து வருகிறோம்.
- எங்கள் நிலங்களை அடமானம் வைத்து குழந்தைகளுக்கு கல்வி செலவுகளை பூர்த்தி செய்து வருகிறோம்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலுக்கு சொந்தமாக ஏராள மான நிலங்கள் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவிலை சுற்றியுள்ள களப்பாகுளம், சீவலராயனேந்தல், ராம நாதபுரம், ஆட்கொண்டார் குளம், வடக்குபுதூர், செந்தட்டி, வேப்பங்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கோவிலுக்கு உரியவை என அறிவிப்பு வெளியானது.
மேலும் இந்த நிலங்களில் பத்திர பதிவு எதுவும் மேற்கொள்ளக்கூடாது என சங்கரன்கோவில் கோவில் துணை ஆணையர் ரத்தின வேல் பாண்டியன், சங்கரன் கோவில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் அவர்களும் பத்திரப்பதிவை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அந்த நிலங்களில் பல ஆண்டு களாக வீடு கட்டியும், விவசாயம் செய்தும் வாழ்ந்து வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் தெற்கு சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவில் துணை ஆணையர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதா வது:-
நாங்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலங்களில் குடியிருந்து அனுபவித்து வருகிறோம். இது எங்களுக்கு பாரம்பரியமாக சொந்தமாக உள்ளது. எங்களுக்கு பணம் நெருக்கடி ஏற்படும் நேரங்களில் எங்கள் நிலங்களை அடமானம் வைத்து அதன் மூலம் திருமணம், குழந்தைகளுக்கு கல்வி செலவுகளை பூர்த்தி செய்து வருகிறோம்.
இந்த நிலங்களின் பெயரில் எந்தவித ஆதாரம் இன்றி அனுபவமின்றி கோவில் நிலங்கள் என ஆட்சேபனை தெரிவித்து பத்திரப்பதிவு நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.