நெல்லை வியாபாரி வீட்டில் கைவரிசை-1½ கிலோ நகை கொள்ளையில் துப்பு துலக்க 3 தனிப்படை
- ராஜஸ்தானை சேர்ந்த மெஹரா ராம் என்பவர் கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வருகிறார்.
- கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை:
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் சிவாணா பகுதியை சேர்ந்தவர் அனுமந்தர் ராம் (வயது 45). இவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் தங்க நகைகளை வாங்கி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
1½ கிலோ நகை கொள்ளை
இதற்காக அவர் நெல்லை சிந்துபூந்துறை செல்விநகர் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் கடந்த 10 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். தற்போது நெல்லையில் அவரது உறவினரான ராஜஸ்தானை சேர்ந்த மெஹரா ராம் என்பவர் தங்கியிருந்து கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது வீட்டின் பூஜை அறையில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள சுமார் 1½ கிலோ நகைகளை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துள்ளார். நேற்று காலை அவர் வீட்டை பூட்டிவிட்டு உடன்குடி சென்ற நிலையில் மாலையில் வந்து பார்த்தபோது வீட்டு கதவு உடைக்கப்பட்டு அங்கு 1½ கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
3 தனிப்படை
இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார், நெல்லை சந்திப்பு உதவி கமிஷனர் ராஜேஷ்வரன், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து சந்திப்பு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை கும்பலை பிடிக்க துணை போலீஸ் கமிஷனர் சரவணக் குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் அதாவது மெஹரா ராமிற்கு நன்கு தெரிந்த நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் மெஹரா ராமுடன் தொழில் ரீதியாகவும், நட்பின் அடிப்படையிலும் பழக்கத்தில் உள்ள வடமாநில வியாபாரிகள், வடமாநில வாலிபர்களின் விபரங்களை போலீசார் சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் சந்திப்பு பஸ் நிலையம் வரையிலும் உள்ள கடைகள், வீடுகளில் பொருத்தப்ப ட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.