உள்ளூர் செய்திகள்

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2024-08-18 09:10 GMT   |   Update On 2024-08-18 09:23 GMT
  • இந்தியாவில் குரங்கம்மை நோய் இல்லை.
  • குரங்கம்மை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கிறார்கள்.

சென்னை:

சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சைதாப்பேட்டை மருத்துவமனை, கொளத்தூர் புறநகர் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளை மேம்படுத்தி தந்து கொண்டிருக்கிறார்.

வருகிற ஜனவரி மாதம் பணிகள் நிறைவடைந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மருத்துவமனையை திறக்க உள்ளார்.

இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் மருத்துவ காப்பீட்டு திட்டம் மிகச் சிறப்பான வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் பயன்பாட்டில் உள்ளது .

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவ மனையில் இதுவரை 3 லட்சத்து 13 ஆயிரத்து 864 புறநோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டு உள்ளது மத்திய மந்திரி நட்டா இந்தியாவில் குரங்கம்மை நோய் இல்லை என்று அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை.

தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு ஆடைகள் தவிர்த்து தெரிகிற உடல் பகுதியில் முகம் போன்ற பகுதியில் குரங்கம்மை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கிறார்கள். யாருக்காவது அந்த பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் செய்த சாதனையே தெரிந்து வைத்திருக்கவில்லை. அம்மா கிளினிக் இருந்தது. அம்மா மருந்தகம் என்று இல்லை. அம்மா உப்பு கடை என்று வைத்திருந்தார்கள்.

ஒன்றிய அரசின் மக்கள் மருந்தகம் தமிழ்நாட்டில் 800-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது, அம்மா மருந்தகம் என்று எந்த காலத்திலும் வைக்க வில்லை, ஜெயக்குமார் எந்த நினைப்பில் சொல்கிறார் என்று தெரியவில்லை.

அம்மா கிளினிக் இருந்தது, ஒன்றிய அரசாங்கத்தின் நிதி ஆதாரத்தோடு ஒரு வருடத்திற்கு உண்டான அரசாணை பெற்று ஒரே ஒரு மருத்துவர் நியமனம் பெற்று எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாக மருத்துவமனைகளை வைத்தார்கள்.

அம்மா கிளினிக், பெரிய கட்டமைப்போடு விளங்கி யது போலவும், நூற்றுக் கணக்கான மருத்துவர்கள் அந்த மருத்துவமனையில் வேலை செய்தது போலவும், அம்மா கிளினிக் மூடி விட்டதால் தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு சிதைந்ததைப் போல எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

அம்மா கிளினிக்கும், அம்மா மருந்தகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அவர்கள் காலத்தில் வந்தது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகிறார்.

தைப்பொங்கல் அன்று ஆயிரம் இடங்களில் மக்கள் மருந்தகம் பயன்பாட்டிற்கு வரும், இந்த திட்டத்திற்கும் அம்மா மருந்தகம் என்ற பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைதான் ஜெயலலிதா அம்மையார் திறந்து வைத்து கல்வெட்டு வைத்துக் கொண்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News